News Just In

2/15/2021 08:22:00 AM

இலங்கையில் கொரோனா தொற்று தொடர்பான முழு விபரம் வெளியாகியது!!


இலங்கையில் நேற்று மாத்திரம் 801 பேருக்கு கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த அனைவரும் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 75 ஆயிரத்து 654 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 71 ஆயிரத்து 627 ஆக காணப்படுகிறது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 865 பேர் குணமடைந்த நிலையில் நேற்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 561 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் மேலும் ஏழு உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த கோதடுவ பகுதியைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

அத்துடன், அங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

மேலும், குருநாகலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 65 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 13 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், மஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவர் மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

பேராதனை பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 11 அம் திகதி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், கம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 13 அம் திகதி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 28 அம் திகதி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை ஊடகா கொரோனா தொற்றினால் குறித்த உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 397 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: