News Just In

2/28/2021 06:28:00 AM

தமிழ் எங்கள் உரிமை பிற மொழி எங்கள் புலமை- மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சரவணபவன்!!


தமிழ் மொழி எங்கள் உரிமை பிற மொழி எங்கள் புலமை. தமிழர்களை பின்னடைந்த சமூகமாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அண்மையில் வெளியாகிய பொதுநிருவாக (SLAS) பரீட்சையில் கூட ஒரு தமிழர்களும் தேர்வுசெய்யப்படவில்லை. தற்போது தேசிய ரீதியான தரப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் நாம் முன்னிலை வகிக்க வேண்டுமானால் மாவட்ட ரீதியில் போட்டியிட்டால் மட்டும் போதாது. தேசிய ரீதியில் போட்டியிட வேண்டும். அப்போதுதான் நாம் கல்வியில் முன்னிலை வகிக்க முடியும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் உரையாற்றினார்.

தடம் அமைப்பினால் பிரித்தானிய சௌத்தென்ட் தமிழ் கல்விக்கூடம் அவர்களது அனுசரணையில் மஞ்சந்தொடுவாய் சாரதா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்.
 
எமது சமூகத்தை மது, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்கும் நிலை காணப்படுகிறது. இதிலிருந்து மாணவர்களும் பெற்றோர்களும் விழிப்பாக இருக்க வேண்டும். எமது கல்வி நிலை வர வர பின்னடைந்து வருகிறது. நாம் அதில் கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் சிறுவர்களின் நலன் பேணும் மாநகராக எமது நகரினை தெற்காசியாவில் முதலாவது சிறுவர் சிநேக மாநகராக மாற்ற பல தொண்டு நிறுவனங்களுடன் கைகோர்த்து இயங்கி வருகிறோம்.

அவர்களுக்கு பிடித்தாற்போல் பல பூங்காக்களை அமைத்துள்ளோம். வட்டாரத்திற்கு ஒரு பூங்கா எனும் திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கவுள்ளோம். அதனை சிறுவர்கள் பயன்படுத்தலாம். இந்த மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் பல அபிவிருத்திகளை மேற்கொள்ள அதிகளவில் நிதி பங்களிப்பு செய்துள்ளோம். உதாரணமாக இங்கு 165 மீற்றர் நீளமான வீதி அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் நாம் மாநகர நிதியினை பயன்படுத்தி 300 மீற்றர் நீளத்திற்கும் அதிகமான பகுதி வீதியினை அபிவிருத்தி செய்தோம்.

அரச மதிப்பீட்டுடன் ஒப்பிடும் போது 40 வீதத்திற்கு அதிகம் அபிவிருத்தி பணிகளை செய்து வருகிறோம். தற்போதைய கொரோனா சூழ்நிலையினால் மாநகர வருமானம் குறைவடைந்ததால் எங்களால் பல அபிவிருத்தி வேலைகளை செய்ய முடியாதுள்ளது. தற்கால அரசியல் மாற்றத்தால் நாங்கள் முன்மொழிந்த ஆசிய அபிவிருத்தி வங்கியில் இருந்தது கிடைக்கவிருந்த 1,800 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடும் தடைப்பட்டுள்ளது. இருப்பினும் நாங்கள் அபிவிருத்தி வேலைகளை கைவிடவில்லை பல செயற்றிட்டங்களை செய்துகொண்டே வருகிறோம்.

இங்குள்ள பிரதான கான் வடிகாலமைப்பினை செய்யவுள்ளோம். இவ்வாறு பல பணிகளை நாம் செய்து முடித்ததன் பின்னர் வேறொருவர் வந்து அதனைநாமே செய்துள்ளோம் என மக்களை ஏமாற்றும் நிலையும் தற்சமயம் காணப்படுகிறது.

எங்களுக்கு பாரிய சவால் உள்ளது. நாம் தேசிய ரீதியில் போட்டியிட வேண்டும். அண்மையில் வெளியாகிய பொதுநிருவாக (SLAS) பரீட்சையில் கூட ஒரு தமிழர்களும் எடுபடவில்லை. தற்போது தேசிய ரீதியான தரப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் நாம் முன்னிலை வகிக்க வேண்டுமானால் மாவட்ட ரீதியில் போட்டியிட்டால் மட்டும் போதாது. தேசிய ரீதியிலும் போட்டியிட வேண்டும்.

காணி அபகரிப்பு, மொழி திணிப்பு என பல இன்னல்களுக்கு நாம் ஆளாகின்றோம். அதனை நாம் விட்டுவிடக்கூடாது. தமிழ் மொழி எங்கள் உரிமை. பிற மொழி எங்கள் புலமை. எமது வடகிழக்கு ஆட்சி மொழி தமிழ். இருப்பினும் இங்கு வரும் கடிதங்கள் சிங்கள மொழியில் வருகின்றன. தமிழில் பல மொழிக் கலப்பு ஏற்படுகிறது. அதனை நாம் அனுமதிக்க கூடாது.
நான் தமிழில் தான் கடிதம் அடித்து கையெழுத்து இட்டு அனுப்புவேன் அது எனது உரிமை. பிறர் விளங்கிக்கொள்ள பிற மொழியில் பிரதிகளை இணைத்து அனுப்புவேன் அது எனது புலமை. உரிமையை ஒருபோதும் நாம் விட்டுவிடக் கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.




No comments: