News Just In

1/01/2021 06:18:00 PM

மட்டக்களப்பில் ஒரு இலட்சம் மரம் நடுகை திட்டம் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆரம்பித்து வைத்தார்!!


(மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எண்ணக்கருவில் உருவான பசுமைப் புரட்சி திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் மரம் நடுகை திட்டம் மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் முற்போக்கு தமிழர் அமைப்பு அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் இவ்வருடம் முன்னெடுக்கவுள்ளது .

முற்போக்கு தமிழர் அமைப்பு அமுல்படுத்தவுள்ள இந்த விசேட மரநடுகை திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கும் முதலாவது நிகழ்வு புத்தாண்டு ஆரம்ப நாளான இன்று வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் வைபவ ரீதியாகஆரம்பித்து வைக்கப்பட்டது .

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த மரநடுகை நிகழ்வினை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்த விசேட மரநடுகை திட்டத்தின் மரநடுகை மட்டக்களப்பு வவுணதீவு ஆயித்திய மலை பிரதான வீதியில் இடம்பெற்றது முற்போக்கு தமிழர் அமைப்பின் உறுப்பினர்களும் பிரதேச செயலக ஊழியர்களும், இப்பிரதேச பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதேவேளை ஒரு லட்சம் மரநடுகை திட்டத்தை முன்னிட்டு பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி உதவிபெறும் குடும்பங்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் கருத்து வெளியிடுகையில்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய பசுமையான நாட்டைஉருவாக்கும் எண்ணக்கருவினை வலுப்படுத்த முற்போக்கு தமிழர் முன்னணி ஒரு இலட்சம் மரம் நடுகை திட்டத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தவுள்ளது.

இதில் நடுகை பண்ணப்படும் மரங்களின் மூலம் இப்பிரதேசத்தில் சுத்தமான காற்றை சுவாசிக்கவும் மற்றும் அனர்த்தங்களில் இருந்து பிரதேசங்களை பாதுகாக்கவும் வழிவகுப்பதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.









No comments: