News Just In

1/03/2021 09:39:00 AM

"கொரோனாவும் மனித குலத்தின் திட சங்கற்பமும்- ஒருவருட அனுபவத்தில் கற்றவை"- மருத்துவர். சி.யமுனாநந்தா!!


(மருத்துவர். சி.யமுனாநந்தா)
கடந்த ஒரு வருட காலமாக உலக மூலை முடுக்கு எங்கும் பாரிய தொற்றினை ஏற்படுத்தி நவீன உலக இயக்கத்தில் பாரிய தடங்கலை கொரோனா தொற்று ஏற்படு;த்தி உள்ளது. ஆனால் அதனை எதிர் கொண்டு முன்னேற மனித குலம் திட சங்கற்பம் பூண்டுள்ளது.

கொரோனா தொற்றின் போது சமூக இயக்கத்தினை செயற்படுத்த ஐந்து அம்சங்கள் இன்றியமையாதவையாகின்றன. 

அவையாவன,
1. விஞ்ஞான ரீதியான அணுகல்
2. வள முகாமைத்துவம்
3. பயிற்சி அளித்தல்
4. நிர்வகித்தல்
5. தொடர்பாடல்

இவ் ஐந்து அம்சங்களும் சமூக இயங்கு தளத்தில்; கொரோனாவிற்கு ஊடாக வாழ்தலில் சிறப்பாக அமைய வேண்டும் என்பதனை கடந்த ஒரு வருட அனுபவம் எமக்கு கற்று தந்துள்ளது. இவற்றுடன் அடிப்படை சுகாதார பழக்க வழக்கங்களையும் நாம் பேணுதல் வேண்டும். அதாவது சமூக இடைவெளி பேணுதல், கை கழுவுதல், தூய்மையின் பிரயோகம், முகக் கவசம் அணிதல் என்பவற்றையும் நாம் தவறாது கைக்கொள்ளுதல் அவசியம்.

முதலாவதாக மருத்துவ சேவையினைக் கருதும் போது கொரோனாத் தொற்று தொடர்பான விஞ்ஞான ரீதியான உண்மைகள் மிகவும் ஆழமானவை. ஆனால் அவை அனைத்தும் சாதாரண மக்களுக்கு பயம் ஊட்டுவதாக அமையக் கூடாது. உதாரணமாக தற்போது கொரோனாத் தொற்று சமூக பரவல் அடைந்து உள்ளதா இல்லையா என்ற கேள்விக்கான விடை, கொரோனாத் தொற்று வீரியத்தன்மை குறைந்து விட்டதா என்பதற்கான விடை, கொரோனாத் தொற்றுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டிய தேவை ஏற்படுமா என்பதற்கான விடை விஞ்ஞான ரீதியில் அணுகப்படுதல் வேண்டும். 

அதே போல் நோய்க் காவிகள் சமூகத்தில் அடையாளம் காணப்படாது உள்ள போது இறந்த கொரோனாத் தொற்று உடையவரின் உடலைப் புதைப்பது ஆபத்து இல்லை என்ற உண்மை, இவை யாவும் அடிப்படை விஞ்ஞானத்தின் விடைகளே. கொரோனாத் தொற்றுத் தடுப்பில் மனித உரிமை அணுகல் மிகவும் இன்றியமையாதது. 

மருத்துவ சேவைக்கு அப்பால் ஏனைய சமூக வளங்கள் சேவைகளான கல்விச் சேவை, வங்கிச் சேவை, நிர்வாகச் சேவை, தொலைத் தொடர்புச் சேவை போன்ற பலவும் மேற் கூறிய ஐந்து அம்சங்களான விஞ்ஞான அணுகல், வள முகாமைத்துவம், பயிற்சி அளித்தல், நிர்வகித்தல், தொடர்பாடல் என்பவற்றை தமது செயற்பாட்டில் பரிமாணமாக்கல் மிகவும் முக்கியமாகும்.

கொரோனாத் தொற்றுத் தொடர்பாக தேவையற்ற பயம் தேவை இல்லை. இதனைச் சாதாரண சுவாசத் தொற்று நோய் போல் கருத வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. சமூக இடைவெளி பேணிய சமூக இணைப்பை கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய நிலையில் நாம் எல்லோரும் உள்ளோம். 

சமூக இணைப்பை நோய்ப் பரம்பலற்ற முறையில் வலுப்படுத்துவதில் விஞ்ஞான ரீதியான அணுகல், வள முகாமைத்துவம், பயிற்சி நெறிகள், நிர்வகிக்கும் முறைமை , தொடர்பாடல் மேன்நிலை என்பன சமூக மட்டத்திலும், சிறு குழுக்கள் மட்டத்திலும் குடும்ப மட்டத்திலும் மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். 

மேலும் நிர்வாக நிலையிலும் அரசியல் ஜனநாயக மட்டத்திலும் கொரோனாக் கால சமூக இணைப்பு பலப்படுத்தல் முக்கியமானது. ஏனெனில் அது தவறும் பட்சத்தில் சமூகத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் இன, மத, பிரதேச ரீதியான புறக்கணிப்பு கொரோனாக் கட்டுப்பாடு என்ற போர்வையில் நிகழ்வதற்கான சாத்தியங்கள் அதிகம் உண்டு.

No comments: