மேல்மாகாணத்தின் அவிசாவளை, கொஸ்கம மற்றும் ருவண்வெல்ல ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு – வெல்லம்பிட்டிய பகுதியில் உள்ள லக்சந்த செவன குடியிருப்பு தொகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இன்று காலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் லக்சந்த செவன குடியிருப்பு தொகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறும் மார்க்கங்களின் பிரதான இடங்களில் எழுமாறாக ரெப்பிட் என்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, 17 இடங்களில் இவ்வாறு பரிசோதனைகள் முன்னெடுக்கபடவுள்ளதாகவும், அதிவேக வீதிகளின் அனைத்து வெளியேரும் பகுதிகளிலும் இவ்வாறு எழுமாறான ரெப்பிட் என்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கபடவுள்ளன.
அத்துடன், கடந்த வாரம் முதல் இவ்வாறு முன்னெடுக்கப்படும் எழுமாறான ரெப்பிட் என்டிஜன் பரிசோதனைகளில் இதுவரை 17 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, திருகோணமலையில், அபயபுர மற்றும் ஜின்னா நகர் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
திருகோணமலையில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இன்று காலை 6 மணிமுதல் நடைமுறைக்கு வரும்வகையில், குறித்த இரண்டு கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் திருகோணமலை மாவட்டத்திற்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
கடந்த நாட்களில் 70 ற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றுபரவல் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால், பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறும் அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இதேவேளை, வெளிமாவட்டங்களில் இருந்து திருகோணமலைக்கு உள்வருவதை தவிர்த்து செயற்படுமாறும் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னைய இணைப்பு….
பண்டிகை காலத்தை முன்னிட்டு மிக நீண்ட விடுமுறைக்காலம் வருவதன் காரணமாக பொதுமக்களை மிகவும் அவதானமாக செயற்படுமாறு இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
மேல்மாகாணத்தில் கொரோனா தொற்று தொடர்ந்தும் அதிகரித்து வருவதன் காரணமாக இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் தமது வீடுகளிலேயே இருப்பது பாதுகாப்பானதாக அமையுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நத்தார் பண்டிகை மற்றும் ஆண்டு பிறப்பு ஆகிய காலப்பகுதிகளில், பொதுமக்களை தமது வீடுகளிலேயே கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறும் இராணுவத்தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், தொற்று பரவல் அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு பொதுமக்கள் வெளிப்பயணங்களை தவிர்த்து செயற்படுவது அவசியமாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பண்டிகை காலத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபடமாட்டாதெனவும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக பல்வேறு சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பாக விளக்கமளிக்கும் போதே இராணுவத்தளபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல்படுத்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எதிர்பார்க்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பயணகட்டுப்பாடுகளை விதிப்பதற்கு தற்போது வரையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இராணுவத்தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments: