News Just In

9/20/2020 12:43:00 PM

மட்டக்களப்பில் இளநீர் விற்கும் இளைஞன் மின்சாரம் தாக்கிப் பலி!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன் 
இளநீர் விற்கும் இளைஞன் தென்னை மரத்தில் ஏறி இளநீர் குலையைப் பறிக்கும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஏறாவூர் மக்காமடி ஆதம்லெப்பை குறுக்கு வீதியை அண்டி வசிக்கும் தாவூத் சலீம் முஹம்மது றிபான் (வயது 19) என்ற இளைஞரே பலியாகியுள்ளார்.

சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, இவர் தெம்பிலி இளநீர் வாங்கி வந்து விற்கும் தொழிலைச் செய்து வருபவர் என்றும் குறிப்பாக தெம்பிலி இளநீர் உற்பத்தியாகும் குருநாகல் போன்ற பிரதேசங்களுக்குச் சென்று அங்கு தானே மரத்தில் ஏறி இளநீர்க் குலைகளைப் பறித்து வந்து விற்பனை செய்து வரும் இளம் குடும்பஸ்தர் என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவதினம் அன்றும் 19.09.2020 இவர் குருநாகல் இப்பாகமுவ பிரதேசத்தில் உள்ள தென்னந் தோப்புக்களிலுள்ள தென்னை மரங்களில் ஏறி இளநீர்க் குலையைப் பறித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியுள்ளது.

உதவிக்கு விரைந்தவர்கள் மின்சாரம் தாக்கிய இளைஞனை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கும்போது செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைகளின் பின்னர் ஏறாவூருக்கு எடுத்துவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்த பொலிஸார் சம்பவம்பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

No comments: