இக் கூட்டத்தில் மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, பிரதம கணக்காளர் திருமதி ஹெலன் சிவராஜா, பொறியியலாளர் திருமதி சித்திராதேவி லிங்கேஸ்வரன் மற்றும் மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறிப்பாக மாநகர கட்டளைச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய வரவு செலவுத்திட்டத்தினை தயாரிக்கும் முறைகள் பற்றியும், எதிர்பார்க்கை வருமானங்கள், செலவினங்கள் அதன் தலைப்புகளின் கீழான ஒதுக்கீடுகள் பற்றியும் மாநகர பிரதம கணக்காளரினால் தெளிவுறுத்தப்பட்டது.
அத்துடன் நடைமுறையில் உள்ள பாதீட்டில் மூலமாக நிறைவுறுத்தப்பட்டுள்ள வேலைகள் , நிலுவை வேலைகள் தொடர்பிலும், கொரொனா நோய் தாக்கத்தின் காரணமாக எதிர்பார்க்கை வருமான இழப்புகள் தொடர்பிலும் மாநகர முதல்வரால் சபையோருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் வெளி மாவட்டங்களிலிருந்து மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் வீதியோர வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவோரால் பொதுச்சந்தை வியாபாரிகள் தமது வருமானத்தினை இழந்து வருவதாகவும், இது தொடர்பில் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் கவனம் செலுத்துவதோடு, வீதியோர வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் மாநகர சபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
அதேவேளை சபைக்கு என நிலையான வருமானத்தினை எக்கால கட்டத்திலும் தொடர்ச்சியாக ஈட்டிக்கொள்ளும் வகையில் நிதியியல் வங்கிசார் நடவடிக்கைகளையும் மாநகர சபையினால் ஆரம்பிக்க வேண்டும் என மாநகர சபை உறுப்பினர் கிளணி வசந்தகுமார் மற்றும் ரொணி பிரின்சன் ஆகியோரால் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டதோடு ஏனைய உறுப்பினர்களும் பாதீடு தொடர்பில் பல்வேறு கருத்துகளையும் முன்வைத்திருந்தனர்.
மேற்படி கருத்து பதிவுகளுடன் வரியிறுப்பாளர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளினது ஆலோசனைகளையும் உள்ளடக்கி தயாரிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்ட வரைவு அறிக்கையானது எதிர்வரும் மார்கழி மாதமளவில் மாநகர சபையின் விசேட பொது அமர்வில் சபைக்கு சமர்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.










No comments: