அலரிமாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் 1000 ரூபா வேதன அதிகரிப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது நானே பிரதமர், எனவே பேச்சுவார்த்தை ஊடாக அதற்கான அறிவிப்பு வழங்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் 20ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக பிரதமரின் அதிகாரம் குறையாது எனவும் பிரதமர் கூறினார்.
அத்துடன் சகல தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகளை கொண்ட தொடர் மாடி குடியிருப்புக்களை நிர்மாணிக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மஞ்சள் இறக்குமதிக்கான தடை நீக்கப்படாது என்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்கவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பசுவதைக்கு எதிரான சட்டம் ஒன்றை இயற்றுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.
13 ஆவது திருத்தச்சட்டம் குறித்து இந்திய பிரதமர் மோடியுடன் கலந்துரையாடிய விடயம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவப்பட்டபோது, சில விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தியதாக தெரிவித்தார்.
எனினும் தாம் மோடியுடன் இது குறித்து பேசிய விடயங்கள் நினைவில் இல்லை என நகைச்சுவையாக பிரதமர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இது குறித்து பின்பு கருத்துரைத்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, 13 திருச்சச்சட்டம் குறித்து மோடியுடன் கலந்துரையாடப்பட்டதாகவும், ஆனால் புதிய யாப்பு ஒன்று கொண்டுவரப்படும் போது அதில் அனைத்தின மக்களுக்கும் தீர்வுகளை வழங்க அவதானம் செலுத்தப்படும் என்று பிரதமர் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

No comments: