தமிழ் தேசியகீதம் மறுப்பு, தமிழர் திருநாள் தடுப்பு, கொலையாளிகளுக்கு பொது மன்னிப்பு, தமிழ் அரசியற் கைதிகளுக்கு இல்லை இவை தானா இந்த ஆட்சியின் இரட்டிப்புச் சுதந்திரமா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் கேள்வி எழுப்பினார்.
பொதுத்தேர்தல் விடயதானங்கள் தொடர்பில் மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வியாழக்கிழம (05) காலை இடம்பெற்ற இளைஞர்களின் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் அரங்கில் பல்வேறு கருத்துக்களைச் சொல்லுகின்றவர்களை விட கொப்பளிக்கின்றவர்கள் அதிகம் காணப்படுகின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சார்ந்து நின்று விலாசத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் தற்போது வெளியில் நின்று கொண்டு விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்த ஆட்சியில் இரட்டிப்புச் சுதந்திரம் கிடைக்கும் என்று சொல்லியிருந்தார்கள். தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற கருத்துச் சொல்லப்பட்டது. ஆனால் 34 புலனாய்வாளர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இதுவும் சொல்லப்பட்ட இரட்டிப்புச் சுதந்திரத்தில் அடங்குமோ தெரியாது.
தமிழில் தேசியகீதம் பாடுவது அடிப்படைவாதத்தைத் துண்டுகின்ற செயற்பாடு என்றும், காணாமல் ஆக்கப்பட்டவர்களை மண்ணுக்குள் தேடிப்பாருங்கள் என்றும் சொல்கின்றார்கள்.
மிருசுவிலில் எட்டுப்பேரின் மிடறுகளும் அறுக்கப்பட்டு கொலை செய்து புதைக்கப்பட்ட செயலைச் செய்தமை தொடர்பில் தண்டனை வழங்கப்பட்ட கைதி ஒருவர் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டமையும் இரட்டிப்பு சுதந்திரத்தில் அடங்குமோ தொரியாது.
19வது திருத்தத்தை நீங்கி சா்வாதிகாரத்துடன் கூடிய ஒரு இறுக்கமான ஆட்சியைக் கொண்டுவர இருக்கின்றார்கள். அவ்வாறு அந்த புதிய சட்டங்களுக்கு தங்கள் கைகளை உயர்த்துவதற்கும் நம்மில் இருந்து போனவர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள்.
பதவிக்காகப் பறிபோனவர்கள் எல்லாம் இப்போது ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டு பல்வேறுபட்ட கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களிடம் நாம் கேட்பது ஒன்றே ஒன்று தான் நீங்கள் சொன்ன இரட்டிப்புச் சுதந்திரம் எங்கே? என தெரிவித்தார்

No comments: