ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று நாடு திரும்பியுள்ள நிலையில் அவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 4.37 மணியளவில் அவர் இலங்கை ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் வழியாக அவர் கட்டுநாயக்க , பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இலங்கை வந்த அவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ( சி .ஐ .டி ) விசாரணைகளை மேற்கொண்டு வந்ந நிலையில் அவரை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அவரை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 2006 ஆம் ஆண்டு மிக்- 27 ரக விமான கொள்வனவின் போது இடம்பெற்ற சுமார் 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி மோசடி தொடர்பில் உதயங்க வீரதுங்க சந்தேக நபராக பெயரிடப்பட்டு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
2016.10.20 ஆம் திகதி அப்போதைய கோட்டை நீதிவானாக இருந்த லங்கா ஜயரத்ன குற்றவியல் சட்டத்தின் 63 (1) அ பிரிவின் கீழ் உதயங்க வீரதுங்கவை , சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைதுசெய்வதற்கான சிவப்பு அறிவித்தல் , பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று இலங்கை வந்தடைந்த நிலையில் விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: