ஊடகம் ஒன்றில் வெளியான தனது செய்திக்கு எதிராக மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பூபாலராஜா தனது கண்டனத்தை தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் கருத்து தெரிவித்த உறுப்பினர் வி.பூபாலராஜா இது தொடர்பாக மேலும் கூறுகையில்.
முகவரியற்ற அப்பா பெயர், அம்மா பெயர் தெரியாத இணையதளத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் பூபாலராஜா அவர்கள் இளைஞர் யுவதிகளுக்கு வேலைகள் பெற்றுத் தருவதாக கூறி பணமோசடி என போட்டு இருந்தார்கள்.
இதனை இயக்குகின்றவர்கள் யார் என எனக்கு தெரியும், குறிப்பிட்ட காலத்தில் புகைப்படக் கருவியை தூக்கி திரிந்தவர்கள் இன்று ஊடகவியலாளர்கள். நான் ஊடகத்தினை குறையாக சொல்லவில்லை ஏனென்றால் சிறந்த ஊடகவியலாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி கொண்டு இருக்கின்றார்கள்.
உயிரைக் கொடுத்து ஊடகவியலாளர்கள் இயங்கிய காரணத்தினால் ஊடக மையம் ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இப்படிப்பட்ட ஊடகவியலாளர்கள் இருக்கின்ற இம் மாவட்டத்தில் இப்படிப்பட்ட முகவரி இல்லாத ஊடகங்கள் இயங்குகின்றது.
நான் நினைக்கின்றேன் இவ் ஊடகத்தினை இயக்குகின்றவர் ஒரு அபிவிருத்தி உத்தியோகத்தராக செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார். இவருக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இச் சபையிலே கூறிக்கொள்ள விரும்புகின்றேன். என அவர் தெரிவித்தார்.

No comments: