தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு வகையான காய்ச்சல் பரவி வருவதனால் பாடசாலைகளுக்கு சமுகமளிக்கும் மாணவர்களின் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் உள்ள கல்குடா, மட்டக்களப்பு மத்தி, பட்டிருப்பு, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பாடசாலைகளில் கல்வியைத் தொடர்கின்ற மாணவர்களின் வரவிலே இவ்வாறு சிறு வீழ்ச்சி நிலைமை ஏற்பட்டுள்ளது.
அம்பாறை கரையோரப் பிரதேசங்களிலும் இந்த வைரஸ் காய்ச்சல் காரணமாக மக்களின் இயல்புநிலை பாதிப்படைந்துள்ளது. கல்முனை, சம்மாந்துரை, அக்கரைப்பற்று, பொத்துவில் உள்ளிட்ட வலயக் கல்வி அலுவலகப் பிரிவுகளின் கீழ் உள்ள பாடசாலைகளிலும் மாணவர் வரவில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சலும் பலருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஒருவித வைரஸ் காய்ச்சலும் பலருக்கு ஏற்பட்டுள்ளதால் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இம்மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை, மட்டக்களப்பு பொது வைத்தியசாலை, ஏறாவூர் வைத்தியசாலை, காத்தான்குடி வைத்தியசாலை ஆகியவற்றில் அதிகமான மாணவர்கள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பனியுடன் கூடிய காலநிலை தொடர்வதனால் காநிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே இவ்வாறு மாணவர்கள் பலரும் நோய்த்தாக்கத்திற்கு உட்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை, மாளிகைக்காடு வைத்தியசாலைகளில் மாணவர்கள் பலர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. பனியுடன்கூடிய காலநிலையும் தொடர்கிறது. இதனால் இந்த தொற்றுக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
மாகாணத்திலுள்ள அரச வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுகளில் பலர் மருந்து பெற்றுச் செல்கின்றனர். மாணவர்கள் பலரை பெற்றோர் வைத்தியசாலைக்கு அழைத்து வருவதை காணக் கூடியதாக உள்ளது.
இருமல் மற்றும் சளியுடன் தொடரும் இந்தக் காய்ச்சல் 5 நாட்களுக்கு மேல் தொடர்வதாகவும் கண் எரிவு, தலையிடி, உடல்நோ போன்றவற்றால் பிள்ளைகள் அவதிப்படுவதாகவும் பெற்றோர் கூறுகின்றனர்.பிள்ளைகளை பரிசோதிக்கும் வைத்தியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு காய்ச்சலினால் பீடிக்கப்படும் பிள்ளைகள் உணவு உட்கொள்வதில் ஆர்வம் செலுத்துவதில்லை. அவர்களது வாய்க்குள் கொப்புளங்கள் ஏற்பட்டு பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
அரச வைத்தியசாலைகளில் நோயாளர்கள் அனுமதிக்கப்படும் அதேவேளை, தனியார் மருந்தகங்களிலும்,வைத்தியசாலைகளிலும் மாணவர்கள் இரவு நேரங்களில் தங்கள் பெற்றோருடன் வந்து சிகிச்சை பெற்றுக் கொண்டு செல்கின்றனர்.
இதற்கிடையே பாடசாலைக்குள் வருகை தரும் பிரதேச டெங்கு கட்டுப்பாட்டுக் குழுவினர் புகை விசிறுகின்றனர். 14நாட்கள் காலக்கெடு கொடுக்கப்பட்டு வருகின்றது. பாவிக்காத மலசலகூடங்களை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு கேட்கப்படுகிறது.
No comments: