News Just In

12/25/2019 12:17:00 PM

நாளை சூரிய கிரகணம்-அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

வியாழக்கிழமை (26.12.2019) ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. மீண்டும் இதே போன்றதொரு சூரிய கிரகணம் 2031ம் ஆண்டு மே 16ம் தேதிதான் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

கிரகணம் என்பது என்ன? 
கிரகணம் என்பது நிழல்தான். நிழலின் விந்தையான விளையாட்டே கிரகணம். சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் ஒரே நேர்கோட்டில் நிலவு வருவதால், பூமியில் விழும் சூரிய ஒளி தடுக்கப்பட்டு, நிலவின் நிழல் பூமியின் மேல் விழுகிறது. இதைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம். 

சூரிய கிரகணம் மூன்று வகைப்படும். 
01. முழுச் சூரிய கிரகணம்
02. வளைய சூரிய கிரகணம் (கங்கண சூரிய கிரகணம்)
03. பகுதி சூரிய கிரகணம்
முழு சூரிய கிரகணத்தின் போது சூரியன் முழுவதுமாக மறைக்கபடும். பகுதி சூரிய கிரகணத்தின் போது சூரியன் பாதி மறைக்கப்படும். வளைய சூரிய கிரகணத்தின் போது சூரியன் முழுவதாக மறைக்கப்படும் ஆனால் அதன் வளைவு பகுதியை மறைக்க முடியாது. அதாவது சூரியன் ஒரு வளையம் போன்று காட்சியளிக்கும் அல்லது மோதிரம் போல காட்சியளிக்கும்.

நாளைய இடம்பெறவுள்ள சூரிய கிரகணம் வளைய சூரிய கிரகணம் (கங்கண சூரிய கிரகணம்) என்று சொல்லப்படுகிறது. அதாவது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும்.

இதன்போது சாதாரண கண்களினால் இந்த வளையத்தை நேரடியாக பார்க்கக் கூடாது. சூரிய ஒளி முழுமையாக மறைக்கப்படாமல், ஒளி குறைந்தாலும் வெளிச்சம் இருக்கும்.

சுனாமி என்ற கடல் பேரலை ஏற்பட்ட 15 வருடம் நிறைவடையும் தினத்திலேயே இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.

இது வடமாகாணத்தில் வளைய சூரிய கிரகணமாகவும், கிளிநொச்சிக்கு கீழாக அநுராதபுரம், வவுனியா போன்ற பிரதேசங்களில் அரைபகுதி நெருப்பு வளைய சூரிய கிரகணமாகவும் காட்சி அளிக்கும் என வானவியலாளர் அனுர ஸ்ரீ பெரேரா தெரிவித்தார்.
2010 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதிக்குப் பின்னர், இந்தச் சூரிய கிரகணத்தைப் பார்க்கக்கூடிய அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கை நேரப்படி, காலை 8.09 முதல் 11.25 வரையான மூன்று மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் இக்கிரகணம் நிகழுகின்ற போதிலும் காலை 9.35 முதல் காலை 9.37 வரையான காலப்பகுதியே உச்ச நிலையாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பகுதியளவிலான சூரிய கிரகணத்தை காலை 8.09 மணியளவிலும் காலை 9.35 முதல் 9.37 வரையான காலப்பகுயில் கங்கண சூரிய கிரணத்தை அவதானிக்கலாம். கொழும்பு நகரில் காலை 8.10 தொடக்கம் பகுதியளவிலான சூரிய கிரகணத்தை பார்க்கலாம். காலியில் காலை 8.11 முதல் அவதானிக்கலாம். அவ்வேளை சூரியன் சந்திரனால் 87.6 வீதம் மறைக்கப்படும். சூரிய கிரகணம் முற்பகல் 11. 22 முடிவுறும் எனவும் அவர் கூறினார்.

இந்த சூரிய கிரகணத்தை அவதானிக்கவென வடபகுதியில் மாத்திரம் சுமார் எட்டு தொலைநோக்கு காட்டிகள் அமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இச்சூரிய கிரகணத்தைப் பார்வையிடுவதற்காக நேற்று முன்தினம் வரையும் சுமார் 1500 பேர் யாழ்ப்பாண மையத்தில் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதனை இங்கு பார்வையிட சுமார் 5000 பேரளவில் வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தடிப்படையில் இச்சூரிய கிரகணத்தைப் பார்க்கவென சோலர் எட்டிலிக்ஸ் வீவர் என்ற கண்ணாடிகள் 2000 ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன என யாழப்பாண பல்கலைக்கழக பௌதிகவியல் பீட சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் கூறினார்.

இந்த கிரகணத்தைப் பார்வையிடுவதில் உள்நாட்டு வெவளிநாட்டு ஆர்வலர்கள் யாழ்குடா நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவிலிருந்து ஐந்து விஞ்ஞானிகளும் வந்துள்ளதாகவும் அவர்களும் யாழ்ப்பாணம், கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் இணைந்து சூரிய கிரகணம் குறித்து மாணவர்களையும் பொதுமக்களையும் அறிவூட்ட உள்ளனர்.

No comments: