(படுவான் பாலகன் )
மண்முனை தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட மண்முனைத் துறையில் குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், இதனைக் கண்காணிக்க விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தெரிவித்தார்.
குறித்த பகுதியில், இனந்தெரியாதோரால் குப்பைகள் கொட்டப்பட்டுவருவதாகவும், குறிப்பாக அயல் பிரதேசசபைக்குட்பட்ட இனந்தெரியாத சிலரே குப்பைகளை கொட்டிவருவதாக அறியமுடிகின்றது. அவ்வாறு குப்பைகளை கொட்டுபவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், குறித்த குப்பைகள் இரவுநேரங்களிலேயே கொட்டப்படுவதாகவும் தெரியவருகின்றது. அவ்வாறு குப்பைகளை கொட்டுபவர்களை கண்காணிக்க விசேட ஏற்பாடொன்றும் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இப்பகுதியில் குப்பைகள் அண்மைக்காலங்களில் கொட்டப்பட்டு, இருதடவைகள் பிரதேசசபையினால் அவற்றினை அகற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டதுடன், பிரதேசத்திற்குட்பட்ட பொது இடங்களில் இவ்வாறான குப்பைகள் இனந்தெரியாதோரால் வீசப்பட்டும் வருகின்றன. அவர்களையும் இனங்கண்டு அவர்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
திண்மக்கழிவுகளை அகற்றுவதற்கான இடம் இல்லாமையினால், உக்கக்கூடிய கழிவுகளை பிரதேசசபையினால் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும், திண்மக்கழிவகற்றலுக்கான இடத்தினை பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் கூறினார்.

No comments: