முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிராமன் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன்னர் (26.10.2019) மரணமடைந்தார்.
1952ஆம் ஆண்டு பெப்ரவரி 26ஆம் திகதி பிறந்த தங்கேஸ்வரி கதிராமன் இலங்கையின் தொல்பொருளியல் வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரென பன்முகம் கொண்டவர். கலைச்செல்வி, தமிழ்ச்செல்வி, சிவச்செல்வி ஆகிய புனை பெயர்களிலும் இவர் எழுதி வந்தார்.
வாழ்க்கைக்குறிப்பு:
மட்டக்களப்பு பிரதேசசெயலகப் பிரிவில் வசித்துவந்த கதிராமன்-திருவஞ்சனம் தம்பதியினரின் புதல்வியாக பிறந்த தங்கேஸ்வரி கன்னன்குடா மகாவித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியைப் பெற்றார். இடைநிலைக் கல்வியை மட்டக்களப்பு ஆனைப்பந்தி RKM மகளிர் உயர்தரப் பாடசாலையிலும், உயர்நிலைக் கல்வியை மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் கல்லூரியிலும் பெற்றார். இவர் தொல்லியலில் சிறப்புப் பட்டம் பெற்றவர்.
தொழில் நடவடிக்கை:
அமரர் தங்கேஸ்வரி ஆரம்பத்தில் கலாசார அமைச்சின் கீழுள்ள இந்துக் கலாசார திணைக்களத்தில் பிரதேச அபிவிருத்தி அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தராகவும், கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையின் பகுதிநேர விரிவுரையாளராகவும் (1992-1995) பணியாற்றியுள்ளார்.
அரசியல்:
ஏப்ரல் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.
2010ஆம் ஆண்டுத் தேர்தலில் இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளராகத் தெரிவு செய்யப்படாததால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு எட்டாவதாக வந்து தோல்வியடைந்தார். விருப்பு வாக்குகளில் ஐமசுக வேட்பாளர்களில் இவர் கடைசியாக வந்தார்.
சமூகப் பணி:
மாவட்ட கலாசார சபை செயலாளர், புலவர்மணி ஞாபகார்த்த சபையின் செயலாளர், வட கிழக்கு மாகாண ஆளுனர் செயலக கலாசார சபை அங்கத்தவர், மட்டக்களப்பு ஏறாவூர் அல்-மத்ரசதுல் முனவ்ரா கலாசார சம்மேளனத்தின் ஆலோசகர், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த இசைக்கல்லூரியின் கல்விப்பகுதி உறுப்பினர்.
எழுத்தாளர்:
இவரின் முதலாவது ஆக்கம் 1972 ஆம் ஆண்டில் ‘தீபாவளி’ எனும் தலைப்பில் வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமானது. இவர் தொடர்ந்தும் ஆய்வுக் கட்டுரைகள், கலாசாரக் கட்டுரைகள், பாமர மக்களின் பரம்பரைக் கதைகள் போன்றவற்றை ஒப்சேவர், தினகரன், வீரகேசரி மற்றும் தினக்குரல் போன்ற தேசியப் பத்திரிகைகளிலும், இலங்கையிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள் மற்றும் நினைவிதழ்களிலும் எழுதிவந்தார்.
எழுதியுள்ள நூல்கள்:
புராதன தொல்பொருள்களை வரலாற்று அடிப்படையில் ஆராய்ந்த இவர் பின்வரும் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
1982-விபுலானந்தர் தொல்லியல் (ஆய்வுநூல்)
1985-குளக்கோட்டன் தரிசனம் (ஆய்வுநூல்)
1995-மாகோன் வரலாறு (ஆய்வுநூல்)
2007-மட்டக்களப்பு கலைவளம் (ஆய்வுநூல்)
2007-கிழக்கிலங்கை வரலாறுப் பாரம்பரியங்கள்
2007-கிழக்கிலங்கை பூர்வீக வரலாறு (கட்டுரைத் தொகுப்பு)
பெற்ற விருதுகளும், கௌரவங்களும்:
1994-குளக்கோட்டன் தரிசனம் (சரித்திர ஆய்வு நூல்) பாராட்டுச் சான்றிதழ் யாழ் இலக்கிய மன்றத்தால் வழங்கப்பட்டது.
1995-சிறந்த சரித்திர நூலாய்வுக்கான (மாகோன் வரலாறு) பாராட்டுச் சான்றிதழ் யாழ் இலக்கிய மன்றத்தால் வழங்கப்பட்டது.
“வன்னியின் ஆய்வுக்கான” முதலாம் பரிசு கனடாதமிழ் சமூக கலாசார சம்மேளனத்தால் வழங்கப்பட்டது.
1996-“தொல்லியல் சுடர்” பட்டம் கனடா தமிழ் சம்மேளனத்தினால் வழங்கப்பட்டது.
2000-“முத்தமிழ் விழா” ஆய்வு வேலைக்காக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் கௌரவிக்கப்பட்டார்.
1994-குளக்கோட்டன் தரிசனம் (சரித்திர ஆய்வு நூல்) பாராட்டுச் சான்றிதழ் யாழ் இலக்கிய மன்றத்தால் வழங்கப்பட்டது.
1995-சிறந்த சரித்திர நூலாய்வுக்கான (மாகோன் வரலாறு) பாராட்டுச் சான்றிதழ் யாழ் இலக்கிய மன்றத்தால் வழங்கப்பட்டது.
“வன்னியின் ஆய்வுக்கான” முதலாம் பரிசு கனடாதமிழ் சமூக கலாசார சம்மேளனத்தால் வழங்கப்பட்டது.
1996-“தொல்லியல் சுடர்” பட்டம் கனடா தமிழ் சம்மேளனத்தினால் வழங்கப்பட்டது.
2000-“முத்தமிழ் விழா” ஆய்வு வேலைக்காக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் கௌரவிக்கப்பட்டார்.
No comments: