News Just In

10/07/2019 06:21:00 PM

மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

மனித உடல் கலங்களின் உணர்திறன் மற்றும் ஒக்ஸிஜன் கிடைப்பதற்கு ஏற்றவாறு மாற்றமடையும் தன்மை  என்பவற்றைக் கண்டுபிடித்ததற்காக வில்லியம் ஜி. கெலின் ஜூனியர் (William G. Kaelin Jr), கிரெக் எல். செமன்சா (Gregg L. Semenza) ஆகிய இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானி சர் பீட்டர் ஜே. ராட்க்ளிஃப்  (Sir Peter J. Ratcliffe) ஆகியோருக்கு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் உடலியல் தொடர்பான அடிப்படை முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன, மேலும் இரத்த சோகை, புற்றுநோய் மற்றும் பல நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய உத்திகளை உறுதிப்படுத்த வழிவகுத்துள்ளன என்று நோபல் பரிசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன.

முதல் நாளில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. நாளை இயற்பியல் துறைக்கும், நாளை மறுதினம் வேதியியல் துறைக்கும் பரிசுகள் அறிவிக்கப்படுவதுடன் வியாழக்கிழமை இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படாததால் இந்த ஆண்டு இரண்டு நோபல் பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன.

No comments: