News Just In

10/19/2019 07:29:00 AM

பள்ளிவாசலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 62 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்திலுள்ள ஹஸ்கா மேனா மாவட்டத்தில் பள்ளிவாசலொன்றில் வெள்ளிக்கிழமை (18) தொழுகையில் ஈடுபட்டிருந்த போது இடம்பெற்ற பல குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து தொழுகைக்கு சென்ற 62 பேர் கொல்லப்பட்டு, 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என ராய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

மீட்புக் குழுவும் மக்களும்  இடிபாடுகளில் இருந்து சடலங்களை வெளியே கொண்டு வருவதற்கு பணியாற்றி வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என நங்கர்ஹாரில் உள்ள மாகாண சபை உறுப்பினர் சோஹ்ராப் கதேரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் வன்முறை "ஏற்றுக்கொள்ள முடியாத" நிலைகளை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறிய ஒரு நாள் கழித்து இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: