News Just In

9/28/2026 02:10:00 PM

கிழக்குப் பல்கலைக்கழகத்தின்வேந்தரின் நன்றி நவிலல் !

கிழக்குப் பல்கலைக்கழகத்தின்வேந்தரின் நன்றி நவிலல் !


வேந்தராக நான் தெரிவு செய்யப்பட்ட செய்தி வெளிவந்த பின்னர், என்னை நேரில் சந்தித்து வாழ்த்தியவர்களுக்கும், தொலைபேசி மூலம் வாழ்த்தியவர்களுக்கும், சமூக ஊடகங்களில் பல்வேறு கோணங்களில் என்னைப் பற்றிய அன்பான பதிவுகளைப் பகிர்ந்தவர்களுக்கும், செய்திகளைப் பரப்பியவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் ஒவ்வொரு வாழ்த்தும் எனக்கு மகிழ்ச்சியையும்  மன  நெகிழ்ச்சியையும் அளித்தது.அதே நேரத்தில், இந்தப் பதவியைப் பற்றிய எனது புரிதலைச் சுருக்கமாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பல்கலைக்கழக வேந்தர் பதவி என்பது பல்கலைக்கழகத்தின் நாளாந்த நிர்வாகத்தை நடத்தும் பதவி அல்ல.பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பொறுப்புகள் துணைவேந்தர், பல்கலைக்கழகக் கவுன்சில், செனட் மற்றும் பிற உரிய அதிகார அமைப்புகளின் மூலம் சட்டத்தின்படி நடைபெறுகின்றன.

துணைவேந்தரே பல்கலைக்கழகத்தின் பிரதான நிர்வாக மற்றும் கல்வி அதிகாரியாகச் செயல்படுகிறார்.வேந்தரின் பதவிக்கு வேறு ஒரு தனித்துவமான இடம் இருக்கிறது.

சட்டரீதியாக அவர் பல்கலைக்கழகத்தின் தலைவராகக் குறிப்பிடப்படுகிறார். ஆனால் அவரது பங்கு பெரும்பாலும் கௌரவத் தன்மையும் அடையாளத் தலைமையும் கொண்டது.

குறிப்பாக பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வேந்தர் தலைமை வகிப்பது அந்தப் பதவியின் முக்கியமான மரபுச் சிறப்பாகும்.

அதனால், வேந்தர் என்பது அதிகாரத்தைப் பயன்படுத்தி பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் பதவி அல்ல.

அது ஒரு வகையில் பல்கலைக்கழகத்தின் உயரிய மரபையும் அறிவையும் கௌரவத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பதவி.

சிறப்பான கல்விச் சேவை, சமூகச் சேவை, கலை, பண்பாடு அல்லது அறிவுத்துறையில் ஒருவர் செய்த நீண்டகாலப் பணியை மதித்து அவருக்கு வழங்கப்படும் கௌரவமாகவும் இந்தப் பதவியைப் பார்க்கலாம்.

எனவே, இந்தப் பொறுப்பை நான் அதிகாரத்தின் பதவியாகப் பார்க்கவில்லை.

மாறாக, பல்கலைக்கழகத்திற்கும் அதன் மாண வர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பணியாளர் களுக்கும், இந்த மண்ணின் அறிவு மற்றும் பண்பாட்டு மரபுக்கும் என்னால் இயன்ற அளவு சேவை செய்யக் கிடைத்த ஒரு புதிய வாய்ப்பாகவே பார்க்கிறேன்.

எனது வாழ்நாளின் பெரும்பகுதி கல்வி, கலை, நாடகம், ஆய்வு மற்றும் பண்பாட்டுப் பணிகளுடன் தொடர்புடையதாக இருந்தது.

இப்போது கிடைத்துள்ள இந்தப் பொறுப்பும் அந்த நீண்ட பயணத்தின் இன்னொரு கட்டமாகவே எனக்குத் தோன்றுகிறது.

இந்தப் பதவியின் எல்லைகளையும் அதன் மரபுச் சிறப்பையும் நான் நன்கு உணர்கிறேன்.அதேவேளை, அதற்குரிய கௌரவத்தையும் பொறுப்பையும் காப்பாற்றுவது எனது கடமை என்றும் கருதுகிறேன்.

என்னைப் பற்றிப் பல்வேறு கோணங்களில் அழகாகப் பதிவுகள் எழுதியவர்களுக்கும்,எனது பழைய பணிகளை நினைவுகூர்ந்தவர்களுக்கும்,எனது நண்பர்களுக்கும்,மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும்,கலைஞர்களுக்கும்,நலன் விரும்பிகளுக்கும்,நேரில் வந்து வாழ்த்தியவர்களுக்கும்,தொலைபேசியில் வாழ்த்தியவர்களுக்கும்,முகநூல் மற்றும் ஏனைய சமூக ஊடகங்களில் வாழ்த்துச் செய்திகளைப் பகிர்ந்தவர்களுக்கும்எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

.இந்த அன்பு எனக்குக் கிடைத்த தனிப்பட்ட கௌரவம் மட்டுமல்ல.

கல்விக்கும் கலைக்கும் பண்பாட்டுக்கும் நான் மேற்கொண்ட நீண்டகாலப் பயணத்திற்கு நீங்கள் வழங்கிய அங்கீகாரமாகவும் இதனை நான் பார்க்கிறேன்.

அந்த அன்பை நான் மனதில் வைத்துக் கொள்கிறேன்.அதற்கான பதிலை வார்த்தைகளால் மட்டும் அல்ல,

எனக்குக் கிடைத்துள்ள இந்தப் பொறுப்பை நேர்மையுடனும் கண்ணியத்துடனும் நிறைவேற்றுவதன் மூலம் வழங்க விரும்புகிறேன்.

மீண்டும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி.

அக்டோபர்  மாதம்  3 ஆம் 4 ஆம் 5 ஆம் திகதிகளில்  பட்டமளிப்பு  விழா  பிள்ளையாரடியில்  அமைந்துள்ள  கிழக்குப் பல்கலைக் கழக  சௌக்கிய   பீடத்தில்  பேராசிரியர்    வரகுணம்  ஞாபகர்த்த  அரங்கில்     நடை பெற உள்ளது

மாணவர்  தமது  அறுவடை காணும் நாள் அதுஅதனை நடத்துவதற்கான  அனுமதி  வழங்குவது  வேந்தர்  கடமை. 

 அதற்கான  அனுமதிக் கையெழுத்திட்ட தருணம்  இதுமாணவர்க்கும்  நிர்வாகத்துக்கும்   என்  வாழ்த்துகள்

சி. மௌனகுரு

No comments: