News Just In

9/29/2026 11:40:00 AM

பயங்கரவாதி ரோஹண விஜேவீரவுக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்த முடியும் என்றால், அகிம்சைப் போராளி திலீபனுக்கு ஏன் சிலை வைக்க முடியாது?

பயங்கரவாதி ரோஹண விஜேவீரவுக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்த முடியும் என்றால்,அகிம்சைப் போராளி திலீபனுக்கு ஏன் சிலை வைக்க முடியாது? இரா.சாணக்கியன் கேள்வி


பயங்கரவாதி ரோஹண விஜேவீரவுக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்த முடியும் என்றால்,அகிம்சைப் போராளி திலீபனுக்கு ஏன் சிலை வைக்க முடியாது? தியாகதீபம் திலீபனுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துவதில் என்ன தவறு? – இரா.சாணக்கியன் கேள்வி

அகிம்சை வழியில் உயிரைத் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனுக்கும், அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கும் தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துவதில் என்ன தவறு இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் ரோஹண விஜேவீர உள்ளிட்டவர்களுக்கு சிலைகள் அமைத்து, அரச அனுசரணையுடனும், அரச தலைவரின் பங்களிப்பு மற்றும் பங்கேற்புடனும் நிகழ்வுகளை நடத்த முடியும் என்றால், அகிம்சை வழியில் தனது உயிரைத் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனுக்கும், அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கும் தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துவதில் என்ன தவறு இருக்கின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற அந்த மோசமான செயல்பாட்டை இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அதுமட்டுமல்லாமல், அந்த பிழையான செயல்பாட்டை மேற்கொண்ட பின்னரும், அதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை எனக் கூறி, குழந்தைகள் பேசுவது போன்று கருத்துக்களை வெளியிடுகின்றனர். தொடர்ந்து இடம்பெறும் இந்த பிழையான செயல்பாடு தமிழ் மக்கள் மத்தியில் தங்களை வெளிப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

மிக முக்கியமாக, இந்த விடயம் தொடர்பாக குறுகிய அரசியல் இலாபம் தேடும் சில தரப்பினரும் இருக்கின்றனர். அனைவருக்கும் தெரிந்த விடயம் என்னவென்றால், அந்த சிலை அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டமை ஸ்ரீலங்கா பொலிஸாரினாலேயே மேற்கொள்ளப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால், இது தொடர்பில் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சில தரப்பினர் கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். சில நேரங்களில் மாநகரசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்களோ தெரியாது. ஆனால் மாநகரசபைகளுக்கு எந்தவிதமான பொலிஸ் அதிகாரமும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் மேற்கொண்டதாகக் கூறப்படும் இந்த நடவடிக்கையை திசைதிருப்பி, இது தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் பிழையான கருத்துக்களை விதைக்க சில தரப்பினர் முயற்சிக்கின்றனர். இது அதைவிட மோசமான செயலாகவே இருக்கின்றது எனவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

“சிலையை அகற்றியது மோசமான விடயம். சிலையை அகற்றிவிட்டு, ‘சிலையை அகற்றியது நாங்கள்தான்’ என்று கூறுவதற்கு முதுகெலும்பில்லாதவர்களாக நீங்கள் இன்று இருக்கின்றீர்கள்” எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியில் பார்வதி அம்மாவுக்கும், வேலுப்பிள்ளை பார்வதி அம்மாவுக்கும் அவர்களின் பெயரில் துறைமுகம் அமைப்போம் எனக் கூறியவர்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, கடந்த ஆண்டு சிலருடைய விருப்பத்தையும் மீறி அந்த இடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியவர்களும் இன்று தியாகதீபம் திலீபனுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்றை நடத்தினால் அதனை விமர்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது முகநூல் பக்கத்தில் தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியமை தொடர்பாக பதிவு செய்திருந்த நிலையில், அதற்கு பேரினவாத சிங்களத் தரப்பினர் வெளியிட்டுள்ள கருத்துக்களைப் பார்க்கும்போது, இந்த நாட்டில் இன்னும் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு அங்குலம் கூட நாம் நெருங்கவில்லை என்பது தெளிவாகத் தெரிவதாகவும் சாணக்கியன் கூறியுள்ளார்.

தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியதற்காக தனது முகநூல் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகளிலும் கருத்துக்களிலும் வன்மத்தை வெளிப்படுத்தும் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான கருத்துக்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ரோஹண விஜேவீரவுக்கு ஜனாதிபதி தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்படுகின்ற நிலையில், தமிழினத்தின் விடுதலைக்காக நடத்தப்பட்ட போராட்டத்துடன் தொடர்புடையவர்களுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துவதில் என்ன தவறு இருக்கின்றது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“எங்களுடைய போராட்டமானது தமிழினத்தின் விடுதலைக்காக நடத்தப்பட்ட போராட்டமாகும். அவர்களை பயங்கரவாதிகள் என்று கூறுவது தொடர்பில் பல்வேறு இடங்களில் பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கலாம். ஆனால், இந்த நாட்டில் ரோஹண விஜேவீர உள்ளிட்டவர்களுக்கு சிலைகள் அமைத்து, அரச அனுசரணையுடனும் அரச தலைவரின் பங்களிப்பு மற்றும் பங்கேற்புடனும் நிகழ்வுகளை நடத்தலாம் என்று கூறப்படும் நிலையில், அகிம்சை வழியில் தனது உயிரைத் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனுக்கும், அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கும் தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துவதில் என்ன தவறு இருக்கின்றது?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பும்போது, தங்களையும் பிழையானவர்களாக சித்தரிப்பதற்கு சில தரப்பினர் முயற்சிப்பதாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், இந்த விடயம் தொடர்பாக ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களும், ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஓரணியாக நின்று, இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த மோசமான செயல்பாட்டிற்கும் சிலையை அகற்றிய நடவடிக்கைக்கும் எதிராக தங்களுடைய கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இந்த மோசமான செயல்பாட்டை நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்பதை மட்டக்களப்பில் இருந்து தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்” என இரா.சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: