News Just In

9/29/2026 03:39:00 PM

நற்பிட்டிமுனை கால்பந்து லீக் சீசன்–02: அக்ஸா லெஜண்ட்ஸ் அணி சம்பியனானது


நற்பிட்டிமுனை கால்பந்து லீக் சீசன்–02: அக்ஸா லெஜண்ட்ஸ் அணி சம்பியனானது !



நூருல் ஹுதா உமர்

நற்பிட்டிமுனை ஐ.ஆர்.எம். பௌண்டேஷனின் ஏற்பாட்டில், நற்பிட்டிமுனை அஷ்ரஃப் ஞாபகார்த்த மைதானத்தில் கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற நற்பிட்டிமுனை கால்பந்து லீக் – சீசன் 02 தொடரின் இறுதிநாள் போட்டிகள் நேற்று (28) நற்பிட்டிமுனை மைதானத்தில் நடைபெற்றது.

நற்பிட்டிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இளம் மற்றும் மூத்த கால்பந்து வீரர்கள் நான்கு அணிகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட இச்சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் நற்பிட்டிமுனை பாரா கிங்ஸ் அணியும், அக்ஸா லெஜண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப் போட்டியில் அக்ஸா லெஜண்ட்ஸ் அணி ஒரு கோலைப் பெற்று முன்னிலை பெற்றது. போட்டியின் இறுதிவரை அந்த முன்னிலையைத் தக்கவைத்துக் கொண்ட அக்ஸா லெஜண்ட்ஸ் அணி, 1–0 என்ற கோல் கணக்கில் நற்பிட்டிமுனை பாரா கிங்ஸ் அணியை வீழ்த்தி, நற்பிட்டிமுனை கால்பந்து லீக் சீசன்–02 தொடரின் சம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டது.

இத்தொடரின் மூலம் நற்பிட்டிமுனை பிரதேசத்தில் உள்ள இளம் மற்றும் மூத்த கால்பந்து வீரர்கள் தமது விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டதுடன், பிரதேசத்தில் காணப்படும் திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையாகவும் இச்சுற்றுத்தொடர் அமைந்திருந்தது.

நற்பிட்டிமுனை ஐ.ஆர்.எம். பௌண்டேஷன் தலைவர் ஏ.ஆர். இம்தியாஸ் தலைமையில் நடைபெற்ற இறுதிநாள் நிகழ்வில், விளையாட்டுத்துறை முன்னாள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக இலங்கை போக்குவரத்துச் சபையின் கல்முனை சாலை முகாமையாளர் வி. ஜௌபர் கலந்து கொண்டதுடன், கிராம நிலதாரிகள், பௌண்டேஷன் நிர்வாகிகள், விளையாட்டுத்துறை சார்ந்தோர் மற்றும் பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு இறுதிப் போட்டியைப் பார்வையிட்டனர்.

இறுதியில் வெற்றிபெற்ற அக்ஸா லெஜண்ட்ஸ் அணிக்கு சம்பியன் கிண்ணமும் 50 ஆயிரம் பணப்பரிசும், இரண்டாம் நிலை பெற்ற அணிக்கு 30 ஆயிரம் பணப்பரிசும் வழங்கப்பட்டதுடன், போட்டியில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் அணிகளும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்

No comments: