
ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட அடிப்படைவாதிகளுடன் இணைந்து 2018ஆம் ஆண்டு புத்தளம் வனாத்தவில்லுவை பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களை சேமித்து வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேருக்கு எதிரான வழக்கை தினசரி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் வழக்கை தினசரி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. லால் ரணசிங்க பண்டார, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் நயோமி விக்ரமசேகர ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. வழக்குடன் தொடர்புடைய சில முக்கிய ஆவணங்கள் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என நான்காவது மற்றும் ஆறாவது சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இதன்போது, அவர்களுடன் தொடர்புடைய வழக்கு ஆவணங்களை புதிய சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்திற்கொண்ட நீதிபதிகள் குழாம், குறித்த ஆவணங்களை இன்று செவ்வாய்கிழமைக்குள் சம்பந்தப்பட்ட இரு கைதிகளுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.2018ஆம் ஆண்டு வனாத்தவில்லுவ பகுதியில் நடத்தப்பட்ட விசாரணையின்போது வெடிபொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படக்கூடிய நைட்ரேட் பொருட்கள், 12 துப்பாக்கி ரவைகள், துப்பாக்கி ஒன்றுடன் நைட்ரிக் அமிலம் மற்றும் யூரியா உள்ளிட்ட பொருட்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டிருந்தன. அபு ஹனீபா மொஹமட் முசீப், அமீர் ஹம்சா மொஹமட் ஹமாஸ், மொஹமட் சரீபு ஆதம் லெப்பை, மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா, மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நவுபர் மற்றும் மொஹமட் ரமீஸ் மொஹமட் சாஜித் ஆகிய ஆறு பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் 14 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்களில் நான்கு பேர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக உள்ளனர். எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் இந்த வழக்கு தொடர்ச்சியாக தினசரி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: