News Just In

7/16/2026 01:25:00 PM

சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷூரா சபையின் புதிய தலைவர் அல்ஹாஜ் ஐ.ஏ.ஜப்பார் கௌரவிப்பு

சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷூரா சபையின் புதிய தலைவர் அல்ஹாஜ் ஐ.ஏ.ஜப்பார் கௌரவிப்பு

நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை வரலாற்றுப் பாரம்பரியமிக்க மஜ்லிஸ் அஷ்ஷூரா சபையின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள, விவசாய அபிவிருத்தி அதிகார சபையின் ஓய்வுபெற்ற மாகாணப் பணிப்பாளர் அல்ஹாஜ் ஐ ஏ ஜப்பார் அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, புதன்கிழமை (15) இஷா தொழுகையைத் தொடர்ந்து மஸ்ஜிதுன் நகர் பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.

மஸ்ஜிதுன் நகர் பள்ளிவாசல் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், சம்மாந்துறை பிராந்தியத்தின் மத, சமூக மற்றும் முக்கியஸ்தர்கள், சமூக ஆர்வலர்கள், உலமாக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு புதிய தலைவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

நிகழ்விற்கு மஸ்ஜிதுன் நகர் பள்ளிவாசல் தலைவரும், சம்மாந்துறை மத்தியஸ்தர் சபையின் தவிசாளருமான அல்ஹாஜ் எம்.வை. அஹமது ஜலீல் தலைமை தாங்கியதுடன், வரவேற்புரையையும் நிகழ்த்தினார்.

இதன்போது பிரதம நம்பிக்கையாளர் கே.எம்.கே.ஏ.ரம்சின் காரியப்பர், சம்மாந்துறை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் எம்.எல்.எச்.பஷீர் மதனி, குவாஸி நீதிபதியும் ஓய்வுபெற்ற நிர்வாக கிராம உத்தியோகத்தருமான எம்.எல்.தாஸிம், மஜ்லிஸ் அஷ்ஷூரா சபையின் முன்னாள் அமீர், மஸ்ஜிதுன் நகர் இமாம் எம்.ஏ.எம். ஜாபீர், பொதுச் செயலாளர் ஏ.எம்.இலியாஸ், செயலாளர் ஏ.சி.ஏ.எம்.. இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரைகளை வழங்கினர்.

புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அல்ஹாஜ் ஐ.ஏ.ஜப்பார், மஜ்லிஸ் அஷ்ஷூரா சபையின் கொள்கை மற்றும் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் சமூக ஒற்றுமை, சமய விழுமியப் பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டை இலக்காகக் கொண்ட பல்வேறு புதிய செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

அகில இலங்கை அளவில் அறியப்படும் சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷூரா சபையின் புதிய தலைமைத்துவ மாற்றம், சமூக ஒற்றுமை மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுவதாகவும் நிகழ்வில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.


No comments: