News Just In

7/16/2026 09:57:00 AM

நிந்தவூர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை : சம்பந்தப்பட்ட அமைச்சுகள், திணைக்களங்களுக்கு பரிந்துரைகளை அனுப்ப தீர்மானம்

நிந்தவூர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை : சம்பந்தப்பட்ட அமைச்சுகள், திணைக்களங்களுக்கு பரிந்துரைகளை அனுப்ப தீர்மானம்


நூருல் ஹுதா உமர்

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா தலைமையிலும், பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லதீப் ஒருங்கிணைப்பிலும், நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்  (15) நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம். தாஹிர் கலந்துகொண்டு, நிந்தவூர் மக்களின் நீண்டகால தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் தயாரிக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி முன்மொழிவுகளை சமர்ப்பித்தார்.

நிந்தவூர் பிரதேச சபையினால் முன்வைக்கப்பட்ட 16 முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன. வீதிப் புனரமைப்பு, கார்பட் மற்றும் கொங்கிரீட் வீதிகள் அமைத்தல், வெள்ளநீர் வடிகால் வசதிகளை மேம்படுத்தல், முன்பள்ளி மற்றும் பொது நூலகம் அமைத்தல், அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு மூன்று மாடிக் கட்டிடத் தொகுதி நிர்மாணித்தல், பொது விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும், பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மின்கம்பங்களை இடமாற்றம் செய்தல், வெட்டுவாய்க்கால் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் வீதி மற்றும் பாதுகாப்புச் சுவர் பணிகளை விரைவுபடுத்துதல், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தல் ஆகிய விடயங்களுக்கும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

இதனையடுத்து, குறித்த அனைத்து முன்மொழிவுகளையும் நடைமுறைப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு பரிந்துரைகளை அனுப்பி, தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தீர்மானம் நிறைவேற்றியது.

இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம். தாஹிர், நிந்தவூர் மக்களின் நீண்டகால தேவைகளை பூர்த்தி செய்யும் இத்திட்டங்கள் தாமதமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தியதுடன், அதற்காக அனைத்து சம்பந்தப்பட்ட தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமா லெவ்வை, நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம், அரச திணைக்களங்களின் தலைவர்கள், பாதுகாப்புப் படையினரின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

No comments: