News Just In

7/30/2026 03:46:00 PM

1940களில் ஒரே பாதையில் பயணித்த தமிழ்-பேசும் மக்கள் 1980களில் வேறு வேறு திசைகளில் சென்று இப்பொழுது பிளவு பட்டு நிற்பதற்கு அந்நிய சக்திகளின் சதி

1940களில் ஒரே பாதையில் பயணித்த தமிழ்-பேசும் மக்கள் 1980களில் வேறு வேறு திசைகளில் சென்று இப்பொழுது பிளவு பட்டு நிற்பதற்கு அந்நிய சக்திகளின்சதியாலோசனைகளேகாரணம்.பேராசிரியர்கிருஷ்ணமோகன்


(- ஏ.எச்.ஏ. ஹுஸைன்;)
1940களில் ஒரே பாதையில் பயணித்த தமிழ்-பேசும் மக்கள் 1980களில் வேறு வேறு திசைகளில் சென்று இழப்புக்களைச் சந்தித்து, இப்பொழுது வெறுப்புணர்வுடன், பிளவுபட்டு நிற்பதற்கு அந்நிய சக்திகளின் சதியாலோசனைகளே காரணம் என கிழக்குப் பல்கலைக் கழக அரசறிவியல்துறைப் பேராசிரியர் தனபாலசிங்கம் கிருஷ்ணமோகன் ஆதங்கம் தெரிவித்தார்.

“வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் சிக்கலுக்குள்ளான இன உறவும், 1985ஆம் ஆண்டுகளுக்கு முன்னரான இணக்க உறவு நிலைக்கு மீளத் திரும்பலின் அவசியமும் தேவைப்பாடும்” எனும் தொனிப் பொருளில் காத்தான்குடியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு வரலாற்று நிகழ்வுகளைத் தெளிவுபடுத்தினார்.

தொழில் வாண்மையாளர், சிவில் அமைப்புகளின் ஒன்றிய செயற்பாட்டாளரும் சமூக சேவையாளருமான யூ.எல்.எம்.என். முபீன் தலைமையில் புதன்கிழமை இரவு 29.07.2026 இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் இன ஐக்கியத்தையும், சகவாழ்வையும் விரும்பி, தேசத்தை நேசிக்கும் சமூக ஆர்வலர்களான புத்தி ஜீவிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தொடர்ந்து வரலாற்றில் இடம்பெற்று வந்த நிகழ்வுகளைத் தெளிவுபடுத்திய பேராசிரியர் கிருஷ்ணமோகன், நாடு சுதந்திரமடைவதற்கு முன்னர் இருந்தே தமிழ்-பேசும் மக்கள் ஒரே பாதையில் பயணித்து வந்துள்ளனர்.

1950களில் இருந்து தமிழ் தேசியவாதம் முஸ்லிம் மக்களையும் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்தது.தந்தை செல்வநாயகம் ‘தமிழ் பேசும் மக்கள்’ என்ற கருத்தாக்கத்தைப் பயன்படுத்தினார்.

அதேநேரம் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் மதத் தனித்துவத்தை அல்லது அடையாளத்தை மறுதலிக்காமல் தமிழ்பேசும் மக்களின் சுதந்திரம், சுயமரியாதை பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதம் தந்தை செல்வநாயகத்தினால் வழங்கப்பட்டது.ஆயினும், தமிழர் அரசியலில் அஷ்ரஃப் வைத்திருந்த பாரிய நம்பிக்கை தோல்வி அடைந்தமை முஸ்லிம்கள் தனிக்கட்சி உருவாக்க மிகப் பிரதான காரணமாக இருந்தது.
இதன் விளைவு 1986ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தைத் தளமாகக் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.
இதேவேளை, தமிழ் பேசும் மக்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வதற்கு மொசாட் உள்ளிட்ட அந்நிய சக்திகள் சதியாலோசனைகளைத் திட்டம் தீட்டி அதை நடைமுறைப்படுத்துவதற்கும் அனைத்து வகையான உதவி ஒத்தாசைகளையும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கினார்கள். அதன்மூலம் இப்பொழுது நாம் பிளவுபட்டு நிற்கிறோம்.

அதனால், இவ்வாறான வரலாற்றுப் பின்னணியிலிந்து நாம் பாடங்களைக் கற்றுக் கொண்டு தமிழ் - பேசும் மக்களின் எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை வடிவமைக்க வேண்டும். இதற்கான அணிதிரட்டல்களை ஆரம்பிக்க வேண்டும்.” என்றார்.

No comments: