News Just In

6/28/2026 02:35:00 PM

கல்முனை நீதிமன்ற வளாகத்திற்கு கத்தார் சேரிட்டியின் அனுசரணையில் பொதுமக்கள் நலனுக்காக நீர் குளிரூட்டி இயந்திரங்கள் அன்பளிப்பு

கல்முனை நீதிமன்ற வளாகத்திற்கு கத்தார் சேரிட்டியின் அனுசரணையில் பொதுமக்கள் நலனுக்காக நீர் குளிரூட்டி இயந்திரங்கள் அன்பளிப்பு


நூருல் ஹுதா உமர்

கல்முனை நீதிமன்ற வளாகத்தைப் பயன்படுத்தும் சட்டத்தரணிகள், வழக்குத் தரப்பினர் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, இரண்டு நவீன நீர் குளிரூட்டி இயந்திரங்கள் பொதுப் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, நீதிக்கான மய்யம் (Centre for Justice) மேற்கொண்ட ஒருங்கிணைப்பு முயற்சியின் பயனாகவும், கத்தார் சேரிட்டி (Qatar Charity) நிறுவனத்தின் அனுசரணையுடனும் இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டது.

நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கத்தார் சேரிட்டி வழங்கிய இரண்டு நீர் குளிரூட்டி இயந்திரங்களும் கௌரவ மேல்நீதிமன்ற நீதிபதி அந்தோணி புள்ளை யூட்சன் அவர்களிடம் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி திருமதி ஆரிகா காரியப்பர், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

கல்முனை நீதிமன்ற வளாகத்திற்கு நாள்தோறும் பெருமளவிலான சட்டத்தரணிகள், வழக்குத் தரப்பினர் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக கடுமையான வெப்பமான காலநிலையில் சுத்தமான குளிர்ந்த குடிநீர் வசதிக்கான தேவை நீண்டகாலமாக உணரப்பட்டு வந்த நிலையில், இந்த இரண்டு நீர் குளிரூட்டி இயந்திரங்களும் அந்தக் குறையைப் போக்கும் பயனுள்ள வசதியாக அமைந்துள்ளன.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி திருமதி ஆரிகா காரியப்பர், சங்கத்தின் கோரிக்கையை ஏற்று அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்த நீதிக்கான மய்யத்திற்கும், அனுசரணை வழங்கிய கத்தார் சேரிட்டி நிறுவனத்திற்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

மேலும், நீதிமன்ற சேவைகளைப் பெற வரும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையிலான இத்தகைய சமூகப் பொறுப்புணர்வு மிக்க திட்டங்கள் மிகவும் பாராட்டத்தக்கவை என்றும் தெரிவித்தார்.

No comments: