News Just In

6/27/2026 06:13:00 PM

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் மாணவர் தலைமைத்துவ இருநாள் வதிவிட முகாம்

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் மாணவர் தலைமைத்துவ இருநாள் வதிவிட முகாம்



நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தின் மாணவர் தலைமைத்துவ ஆளுமைகளை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "மாணவர் தலைமைத்துவ வதிவிட முகாம் – 2026" (Prefect Leadership Residential Camp – 2026) ஆரம்ப நிகழ்வு வெள்ளிக்கிழமை (26) பிற்பகல் 3.00 மணிக்கு பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

பாடசாலையின் ஒழுக்காற்று ஆசிரியர் மேஜர் எம்.எஸ்.எஸ். ஷிப்லியின் ஒருங்கமைப்பில் பாடசாலை அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.சி. இந்திக கலந்து கொண்டு இருநாள் வதிவிட முகாமை ஆரம்பித்து வைத்தார்.

பாடசாலையின் ஒழுக்காற்று சபை ஏற்பாடு செய்துள்ள இம்முகாமில் மாணவர் தலைவர்கள் சிறந்த தலைமைத்துவம், ஒழுக்கம், குழு ஒருங்கிணைப்பு, பொறுப்புணர்வு, சமூகப் பண்புகள் மற்றும் முடிவெடுக்கும் திறன் போன்ற விடயங்களில் பயிற்சிகளைப் பெறவுள்ளனர்.

நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்களான எம்.எச். லாபீர், திருமதி ஏ.பி. ரொஷான் டில்ராஸ், சாய்ந்தமருது பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வீ. குகராஜ், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் பொறியியலாளர் கமால் நிஷாத், பெற்றோர்-ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், வளவாளர்கள், நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எதிர்காலத்தில் திறமையான, பொறுப்புணர்வுமிக்க மாணவர் தலைவர்களை உருவாக்கும் நோக்கில் இவ்வாறான தலைமைத்துவ வதிவிட முகாம்கள் முக்கிய பங்களிப்பை வழங்கும் என பாடசாலை நிர்வாகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் 100 பேரளவில் கலந்து கொண்ட இந்த இரு நாள் வதிவிட தலைமைத்துவ முகாமில் தேசிய மாணவர் படையணியின் 38 வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் கே.எம். தமீம், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வீ. குகராஜ், முதலுதவி பயிற்றுவிப்பாளர் எம்.எஸ்.எப். நிஹாரா, உளவளத்துணை ஆலோசகர் மனுஷ் அபூபக்கர், பாடசாலை அதிபர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு தலைமைத்துவ பயிற்சிகளை வழங்கினர்.

No comments: