News Just In

6/28/2026 02:59:00 PM

மட்டக்களப்பில் ஹேபர்ட் கூடைப்பந்தாட்ட சவால் கிண்ணப் போட்டிகள் ஆரம்பம்.

மட்டக்களப்பில் ஹேபர்ட் கூடைப்பந்தாட்ட சவால் கிண்ணப் போட்டிகள் ஆரம்பம்.


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மிக்கேல் கல்லூரியில் ஒன்பதாவது ஆண்டாக நடைபெறும் ஹேபர்ட் கூடைப்பந்தாட்ட சவால் கிண்ணப் போட்டிகள் பாடசாலையின் ஹேபர்ட் கூடைப்பந்தாட்ட உள்ளக அரங்கில் சனிக்கிழமை 27.06.2026 கோலாகலமாக இடம்பெற்றது.

மிக்கேல் கல்லூரியின் கொழும்பு கிளை பழைய மாணவர் சங்கத் தலைவர் எஸ். சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி கூடைப்பந்தாட்ட வளர்ச்சி ஆகியவற்றிற்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய இயேசு சபைத் துறவி ஜோன் ஹேபர்ட்டின் திருவுருவப்படம், பாடசாலை பழைய மாணவர் சங்க உதவி போசகரும் யேசுசபை துறவியுமான அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளாரால் உத்தியோகபூர்வமாக திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முன்னணி பாடசாலைகள் பங்கேற்றுள்ள இப்போட்டித் தொடரில், 20 வயதிற்குட்பட்ட கூடைப்பந்தாட்ட வீரர்கள், வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் களமாக இது அமைந்துள்ளது.

மட்டக்களப்பில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஹேபர்ட் கூடைப்பந்தாட்ட சவால் கிண்ணப் போட்டிகள், இவ்வாண்டுடன் ஒன்பதாவது முறையாக நடைபெறுவதுடன், இளம் கூடைப்பந்தாட்ட வீரர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் முக்கிய விளையாட்டு நிகழ்வாக மாவட்டத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் இயேசுசபை மேலாளர் அடிகளார் ரீ. சகாயநாதன், இயேசுசபைத் துறவி அடிகளார் அ.அ. நவரெட்ணம், பாடசாலை அதிபர் அன்டன் பெனடிக்ற் ஜோசப், மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் எம். செல்வராசா, கொழும்புக் கிளை பழைய மாணவர் சங்க செயலாளர் ஜீ. பிரசாந்தன், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments: