News Just In

5/14/2026 06:15:00 PM

பசிலின் வீட்டுக்குள் நுழைந்த மாணவர்கள் - மல்வானையில் பரபரப்பு!

பசிலின் வீட்டுக்குள் நுழைந்த மாணவர்கள் - மல்வானையில் பரபரப்பு!



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவின் மல்வானை வீட்டிற்குள் நுழைந்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் (IUSF) இன்று அதிரடியான முற்றுகைப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

கம்பஹா - மல்வானை பகுதியில் 16 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்டமான சொகுசு இல்லம் மற்றும் காணி, கடந்த காலங்களில் பசில் ராஜபக்சவின் நிதியில் நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறி நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

எனினும், நீதிமன்ற விசாரணைகளின் போது குறித்த காணி மற்றும் கட்டிடத்திற்குத் தாம் உரிமையாளர் அல்லவென பசில் ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் தெரிவித்திருந்த நிலையில், இந்தச் சொத்து நீண்டகாலமாக "உரிமையாளர் அற்றது" என வர்ணிக்கப்பட்டு வந்தது.

இந்தச் சட்ட ரீதியான இடைவெளியைப் பயன்படுத்தி, குறித்த பெறுமதியான சொத்தை அரசாங்கம் முறையாகப் பொறுப்பேற்று மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதே மாணவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது.

இன்று காலை குறித்த பகுதிக்கு பேரணியாகச் சென்ற மாணவர்கள், பொலிஸாரின் வீதித்தடைகளையும் மீறி காணிக்குள் நுழைந்து அதனை ஆக்கிரமிக்கும் "நேரடிப் போராட்டத்தை" ஆரம்பித்தனர்.

நாட்டின் பல்கலைக்கழகங்கள் தங்குமிட வசதி, இடப்பற்றாக்குறை மற்றும் ஆய்வுகூட வசதிகள் இன்றி பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், ஊழல் மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் இவ்வாறான பிரம்மாண்டமான சொத்துக்கள் வீணாகக் கைவிடப்பட்டிருப்பதை ஏற்க முடியாது என மாணவர் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

மாணவர்கள் வீட்டிற்குள் நிலைகொண்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததோடு, மாணவர்களுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது தள்ளுமுள்ளு மற்றும் முறுகல் நிலை ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments: