News Just In

5/14/2026 06:18:00 PM

கபில சந்திரசேனவின் விவகாரம்! அறையில் கண்டுபிடிக்கப்பட்ட வங்கி அட்டை - பணிப்பெண் வழங்கிய முக்கிய வாக்குமூலம்

கபில சந்திரசேனவின் விவகாரம்! அறையில் கண்டுபிடிக்கப்பட்ட வங்கி அட்டை - பணிப்பெண் வழங்கிய முக்கிய வாக்குமூலம்



ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான சில தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டில் இருந்து ( 08) சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பின்னணியில், கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்தார்.

மூத்த கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள வீட்டின் ஓர் அறையில் கபில சந்திரசேனவின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், அவரது மரணம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், மரணம் நிகழ்ந்த இடத்தில் இறந்தவரின் கைபேசியின் உறையில் வங்கி அட்டை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அந்த வங்கி அட்டை உடனடியாக விசாரணை நடத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கபில சந்திரசேனவின் 'ஐ-16' ஆப்பிள் கைபேசியை சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து கைப்பற்றியதாகவும், விசாரணைக்குத் தேவையான தகவல்கள் அந்த கைபேசியில் இருப்பதாக தாம் நம்புவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கபில சந்திரசேன கடைசியாக தங்கியிருந்த மூத்த கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் வீட்டின் பணிபுரிந்த பணிப்பெண் மற்றும் ஓட்டுநரின் கைபேசிகள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கைகளைக் பொலிஸாருக்கு வழங்குமாறு சம்பந்தப்பட்ட கைபேசி நிறுவனங்களின் மேலாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கபில சந்திரசேனவின் கழுத்திலும், வீட்டின் குளியலறைக் கதவிலும் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பெல்ட்டின் இரண்டு துண்டுகளும் ஒரே பாகங்கள் தானா என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு மேலும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்போது மூத்த கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் மனைவி அனுஷ்கா மற்றும் ஆர்.எம். சோமதாசா என்ற வீட்டுப் பணிப்பெண் ஆகியோர் இரண்டும் ஒரே பெல்ட் என அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஐந்து பேர் கொண்ட நிபுணர் மருத்துவக்குழுவால் கபில சந்திரசேனவின் உடலிலிருந்து பிரேதப் பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட கைரேகைகள் அரச கைரேகை ஆய்வாளருக்கு அனுப்புமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments: