
நியாயமற்ற இடமாற்ற முறையைக் கண்டித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 8 மணி முதல் ஆரம்பமான இந்தப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளின் சேவைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத காரணத்தால், போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கச் சங்கம் முடிவு செய்துள்ளது.
இது குறித்துக் கருத்து வெளியிட்ட சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகந்ததாச, "எமது நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் இணக்கப்பாடு எட்டப்படாததால் போராட்டத்தைத் தொடர தீர்மானித்துள்ளோம். எமது அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகள் மற்றும் போராட்டத்தின் வீச்சு குறித்து இன்று கூடவுள்ள சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
திடீரென ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தால் வெளிநோயாளர் பிரிவுகள் மற்றும் கிளினிக் சேவைகள் ஸ்தம்பித்துள்ளன. இதனால் தூர இடங்களிலிருந்து சிகிச்சைகளுக்காக வந்த ஆயிரக்கணக்கான நோயாளர்கள் எவ்வித சிகிச்சையுமின்றித் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அவசர சிகிச்சை மற்றும் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் வழமை போல் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: