News Just In

4/06/2026 01:10:00 PM

மாகாண தரப்படுத்தலில் கல்முனை வலயம் முன்னேற்றம் : வலய கல்விப் பணிப்பாளர் பாராட்டு – 2026 இலக்கை நோக்கி புதிய உறுதி

மாகாண தரப்படுத்தலில் கல்முனை வலயம் முன்னேற்றம் : வலய கல்விப் பணிப்பாளர் பாராட்டு – 2026 இலக்கை நோக்கி புதிய உறுதி


நூருல் ஹுதா உமர்

அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மாகாண தரப்படுத்தலில், கிழக்கு மாகாணத்தில் கல்முனை கல்வி வலயம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டில் 7ஆவது இடத்தில் இருந்த கல்முனை வலயம், இவ்வாண்டு 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இம்முன்னேற்றம் பல்வேறு கல்விசார் அளவுகோள்களில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் பிரதிபலிப்பாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, மொத்த சித்தி வீதம் கணிசமாக உயர்ந்துள்ளதுடன், 3A பெறுபேறு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 76 ஆக இருந்த நிலையில், இவ்வாண்டு 88 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை, 3S தரப்படுத்தல் கணிப்பிலும் முன்னேற்றம் காணப்பட்டதுடன், “W” (தோல்வி) பெறுபேறுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதும் கல்வி தர உயர்வை சுட்டிக்காட்டுகிறது.

இந்த முன்னேற்றம், கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம். எஸ். ஸஹதுல் நஜீம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கைகளின் விளைவாகும் எனக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வலய மட்டத்தில் நடத்தப்பட்ட தரிசிப்பு நிகழ்ச்சிகள், பாடசாலைகளின் கல்வி செயல்திறனை மதிப்பீடு செய்யும் வெளிவாரி கண்காணிப்பு முறைகள், மற்றும் ஆசிரியர்-மாணவர் செயல்திறன் மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவை இம்முன்னேற்றத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.

இதனையடுத்து, வலய கல்விப் பணிப்பாளர் அனைத்து அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் கல்வியலாளர்கள் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர். மேலும், 2026ஆம் ஆண்டில் கல்முனை வலயம் இன்னும் உயர்ந்த நிலையை அடைய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த முயற்சிகள் தொடர்ந்து வலுப்பெற்றால், எதிர்வரும் ஆண்டுகளில் கல்முனை வலயம் மாகாண மட்டத்தில் முன்னணி இடத்தைப் பெறும் என்பதில் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது

No comments: