
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் இன்று ‘ஏ’ பிரிவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, 2009-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த போட்டி பல்வேறு கட்ட சிக்கல்களுக்கு பின்னர் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் அணி முதலில் இந்தியாவுக்கு எதிராக விளையாட மறுப்பு தெரிவித்தது. அந்த அணி வங்கதேச அணி டி 20 உலகக் கோப்பை தொடரில் நீக்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக தெரிவித்தது.
இதன் பின்னர் ஐசிசி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. தொடர்ந்து நட்பு நாடுகளான வங்கதேசம், இலங்கை, ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியங்களும் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் முடிவை வாபஸ் பெற்றது.
இதைத் தொடர்ந்தே இரு அணிகளும் இன்று இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் மோத உள்ளன. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் நமீபியாவை 93 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்து இருந்தது.
இந்திய அணியில் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவது உறுதி செய்யப்படவில்லை. உடல் நலக்குறைவு காரணமாக அவர், நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கவில்லை. ஒருவேளை அவர், உடற்குதியை பெற்று களமிறங்கும் பட்சத்தில் சஞ்சு சாம்சன் வெளியே அமரவைக்கப்படுவர்.
போட்டி நடைபெறும் பிரேமதாசா ஆடுகளம் முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்கக்கூடும். இது நிகழ்ந்தால் அர்ஷ்தீப் சிங் அல்லது ரிங்கு சிங் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்படக்கூடும். குல்தீப் யாதவ், துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இது ஒருபுறம் இருக்க ஆல்ரவுண்டான வாஷிங்டன் சுந்தர் முழு உடற்தகுதியை எட்டி உள்ளார்.
இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் நடப்பு தொடரில் கொத்தாக விக்கெட்களை பறிகொடுப்பது வாடிக்கையாகி உள்ளது. மும்பையில் நடைபெற்ற அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க கட்டத்தில் 77 ரன்களுக்கு 6 விக்கெட்களை இந்திய அணி பறிகொடுத்திருந்தது.
அதேவேளையில் நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இறுதிக்கட்ட ஓவர்களில் இந்திய அணி 4 ரன்களுக்கு 5 விக்கெட்களை தாரை வார்த்து இருந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் குவித்ததால் விக்கெட்கள் சரிவு என்பது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
இந்த இரண்டு போட்டியில் மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவும், டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியாவும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்திருந்தனர். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்களிடம் இருந்து பெரிய அளவிலான செயல் திறன் வெளிப்படவில்லை.
உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் ஒரு அணி சாதிக்க வேண்டும் என்றால் தனிப்பட்ட வீரர்களின் திறமையை நம்பியிருப்பதை விட, கூட்டு முயற்சி தேவை. அதிலும் பாகிஸ்தான் போன்ற அணிக்கு எதிராக அனைத்து வீரர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவது அவசியம். சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியையும், 2-வது ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்க அணியையும் வீழ்த்தியிருந்தது. அந்த அணி இரு ஆட்டங்களையும் இலங்கையிலேயே விளையாடி உள்ளது. சுமார் 2 வாரங்களாக அந்த அணி அங்கேயே தங்கியிருப்பது சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணியில் உஸ்மான் தாரிக், சைம் அயூப், அப்ரார் அகமது, ஷதப் கான், முகமது நவாஷ் ஆகிய 5 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் உஸ்மான் தாரிக் நீண்ட நிறுத்தம் செய்து பந்துவீசும் பாணி விவாதமாக மாறி உள்ளது. இதனால் அவரது பந்துவீச்சு இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு புதிய அனுபவமாக இருக்கக்கூடும்.
பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் சாஹிப்சாதா ஃபர்ஹான். சல்மான் அலி ஆகா, சைம் அயூப், ஃபஹீம் அஷ்ரஃப் ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். இதில் சாஹிப்சாதா ஃபர்ஹான், கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் ஜஸ்பிரீத் பும்ராவின் பந்துவீச்சில் தொடர்ச்சியாக 2 சிக்ஸர்களை அடித்து கவனம் ஈர்த்து இருந்தார்.
எனினும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இதுவரை வலுவான பந்துவீச்சை எதிர்கொள்ளவில்லை. அந்த அணி தனது முதல் 2 ஆட்டங்களிலும் நெதர்லாந்து, அமெரிக்காவையே எதிர்கொண்டிருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் கொடுக்கக்கூடும்.
இதேபோன்று பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே ஆகியோர் சிறப்பாக மட்டையை சுழற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசைக்கு இடது கை வேகப்பந்து வீச்சாளர்களான ஷாகின் ஷா அப்ரிடி, சல்மான் மிர்ஸா அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
மே.இ.தீவுகள் மோதல்: முன்னதாக இன்று காலை 11 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் - நேபாளம் அணிகள் மோதுகின்றன.
இதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள அமெரிக்கா - நமீபியா அணிகள் மோதுகின்றன.
மழைக்கு வாய்ப்பு: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று கொழும்பு நகரில் மோத உள்ளன. இந்நிலையில் வங்காள விரிகுடாவில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கொழும்பு நகரில் மாலையில் 70 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இலங்கை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கை குலுக்கல் இருக்குமா? - கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது டாஸ் நிகழ்வில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்கவில்லை. மேலும் போட்டி முடிவடைந்த பின்னரும் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய அணி வீரர்கள் பரஸ்பரம் கைகுலுக்குவதை தவிர்த்தனர். இந்த நிலை உலகக் கோப்பையிலும் தொடரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் கேட்டபோது, ‘24 மணி நேரம் பொறுத்திருங்கள். ஏன் அதில் இவ்வளவு கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் கிரிக்கெட் விளையாட வந்துள்ளோம். மற்ற விஷயங்களை நாளை பார்த்துக்கொள்வோம்” என்றார்.
இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா கூறும்போது, “கிரிக்கெட்டை ஆத்மார்த்தமாக விளையாட வேண்டும். எனது தனிப்பட்ட கருத்து ஒரு பொருட்டல்ல. ஆனால் கிரிக்கெட் எப்போதும் எப்படி விளையாடப்பட வேண்டுமோ அப்படி விளையாடப்பட வேண்டும். என்ன செய்வது என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.
தியேட்டர்களில் கிரிக்கெட் போட்டி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் ஆட்டத்தை டெல்லியிலுள்ள ஓட்டல்கள், சினிமா அரங்குகள் நேரடி ஒளிபரப்பு செய்ய தயார் நிலையில் உள்ளன.
டெல்லியில் உள்ள ஓட்டல்களில் பெரிய திரைகளைத் தயார் செய்து வாடிக்கையாளர்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுவையான உணவு வகைகளையும் ஹோட்டல்கள் அறிமுகம் செய்துள்ளன. ஹாட்ரிக், பியர் பவுண்டரி, சிக்ஸர் சேவர், பவுண்டரி பிஞ்ச் என்ற பெயரில் குளிர்பானங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள பிவிஆர் சினிமா மல்ட்டிபிளெக்ஸ் தியேட்டரில் 300 திரைகளில் போட்டியைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments: