பாக். வீரர்களுடன் கைகுலுக்குவீர்களா? - ‘காத்திருந்து பாருங்கள்’ என சூர்யகுமார்

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவீர்களா என்ற கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதில் அளித்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூர தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு இந்தியாவின் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு பதிலடி தரப்பட்டது. அந்த சம்பவத்துக்குப் பின்னர் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் ஆசிய கோப்பை தொடரில் விளையாடின.
பாகிஸ்தானுடன் ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை மாதிரியான பல அணிகள் பங்குபெறும் தொடர்களில் மட்டும் ஆடுவதென்பதும், இருதரப்பு தொடர்களை தவிர்ப்பதும் இந்திய அரசின் கொள்கையாகவே வகுத்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரின் போது மூன்று முறை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடி இருந்தது. அப்போது பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்துவிட்டனர். அது பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொழும்பில் பத்திரிகையாளர்களை சூர்யகுமார் யாதவ் சந்தித்தார். அப்போது பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவீர்களா என அவரிடம் கேட்கப்பட்டது. “நேரம் இருக்கிறது கொஞ்சம் பொறுத்திருங்கள். அதில் ஏன் இவ்வளவு அழுத்தம்? நாங்கள் இங்கு கிரிக்கெட் விளையாட வந்துள்ளோம். நாங்கள் சிறந்த கிரிக்கெட் விளையாட உள்ளோம். அது குறித்து இன்று நாங்கள் முடிவு செய்வோம். காத்திருங்கள். இன்று அந்த சஸ்பென்ஸை உடைக்கிறேன். இப்போது ஆட்டம்தான் முக்கியம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அற்புதமான பவுலிங் யூனிட்டை கொண்டுள்ள நிலையில் நான் எந்த திட்டத்தையும் வகுக்கவில்லை. கள சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்க விரும்புகிறேன். அதுதான் முக்கியம் என கருதுகிறேன். பவர்பிளே ஓவரில் யாரை வீச செய்தால் சரியாக இருக்குமோ அவரை பயன்படுத்துவேன்” என்றார்.
No comments: