News Just In

2/10/2026 02:08:00 PM

சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

 சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம



நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (10) ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா அவர்களின் தலைமையில், சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ். எல். முஹம்மது ஹனீபா அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. எம். தாஹீர், எம். எஸ். உதுமாலெப்பை, கே. கோடிஸ்வரன், சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ. எல். எம். மாஹீர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஐ. எம். மன்சூர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ. எல். எம். அஸ்லம், பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஜா சக்தி கிராம மட்ட செயற்திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல், அங்காடி வியாபாரிகளுக்கான வியாபார அனுமதி, சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பிரச்சினைகள், புனரமைப்பு செய்யப்படாமல் உள்ள வீதிகள், சம்மாந்துறை வைத்தியசாலை காணி விவகாரம், செந்நெல் கிராமம் மற்றும் மல்வத்தை பிரதேச வைத்தியசாலைகளின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பப் பாடத்தினை ஆரம்பித்தல், மாட்டு வண்டி தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், வீரமுனை இந்துமயான பிரச்சினை, சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் பெளதீக மற்றும் உள்ளக வசதிகள் தொடர்பான பிரச்சினைகள், விவசாய காணி மற்றும் நீர்ப்பாசன தொடர்பான முறைப்பாடுகள் ஆகியவை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு, அதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

பிரதேச அபிவிருத்தியை விரைவுபடுத்தும் நோக்கில் பல முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments: