News Just In

1/14/2026 11:17:00 AM

ஏழை மக்களுக்கு அதிகாரிகள் செய்த துரோகம் !

ஏழை மக்களுக்கு அதிகாரிகள் செய்த துரோகம் : வெள்ளத்தில் மூழ்கிய கரையோர மக்கள் – “Nil Report” என்ற பெயரில் பறிக்கப்பட்ட அரச நிவாரணம்



நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று – காதிரியா, மீராவோடை, பதுர் நகர் உள்ளிட்ட கரையோர பகுதிகளில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏழை மக்களுக்கு அரச நிவாரணம் வழங்கப்படாமல் போன பின்னணியில் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. வெள்ள நிவாரணம் தொடர்பாக “ஏன் அரச உதவி வழங்கப்படவில்லை?” என்ற கேள்விக்கு கிடைத்த பதில் சமூகத்தை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் சபூர் ஆதம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,

நவம்பர் 26, 27 ஆகிய தினங்களில் குறித்த பகுதிகளுக்குரிய சில கிராம உத்தியோகத்தர்கள், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு அனுப்பிய அறிக்கையில், “யாரும் பாதிக்கப்படவில்லை” என சமர்ப்பித்திருப்பதே அரச நிவாரணம் மறுக்கப்பட்டதற்கான காரணம் என உறுதியாகியுள்ளது. இது தகவலறியும் சட்டம் மூலம் உறுதி செய்யப்பட்ட உண்மை என தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த அறிக்கைகள் தற்போது கிடைத்துள்ள நிலையில், அதிகமான கிராம உத்தியோகத்தர்கள் Nil Report தான் அனுப்பியுள்ளனர் என்பது ஆவண ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை நிலை வேறு. நவம்பர் 26, 27, 28 ஆகிய தினங்களில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. மீராவோடைக்கு பின்னால் பல வீடுகள் நீரில் முழுமையாக மூழ்கியிருந்தன. நீரில் சூழப்பட்ட ஒரு வீட்டில் நான்கு சிறு குழந்தைகள், ஒரு சிறிய தகட்டுப் பிங்கானில் சிறிதளவு உணவை பகிர்ந்து உண்ட காட்சியை பார்த்த ஒருவர், “என் மனம் வெந்த புண் போல மாறிவிட்டது” என உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளார்.

மின்சாரம் இல்லாத அந்த இருட்டிலும், சில மாநகரசபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, சமைத்த உணவுகளை மாநகரசபை வாகனங்களில் கொண்டு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளனர். அந்த மனிதநேய நடவடிக்கைகள் சமூக ஊடகங்களிலும் பதிவாகியிருந்தன. அம்பாறை மாவட்டத்தில் கடமை புரியும் ஒரு அதிகாரி வழங்கிய தகவலின்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 240 பேருக்கான நிவாரணத் தொகை, அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு வழங்கப்படாமலேயே திரும்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரதேச செயலாளர் பல முயற்சிகளை மேற்கொண்ட போதும், “வேலைப்பளு அதிகரிக்கும்” என்ற காரணத்தால், சில கிராம உத்தியோகத்தர்கள் திட்டமிட்டு Nil Report அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது வலுப்பெற்று வருகிறது. இதிலேயே மிகவும் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால், இந்த கரையோர மக்கள் இன்றும் “ஒரு நாள் அரச நிவாரணம் வரும்” என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

வெள்ளத்தில் சொத்துகளை இழந்து, இருட்டிலும் பசியிலும் தவித்த இந்த ஏழை மக்களுக்கு, ஆவணங்களில் “பாதிப்பு இல்லை” என்று எழுதப்பட்ட அந்த மனநிலை அது அலட்சியமா? மனிதநேயமற்ற நிர்வாகமா? அல்லது திட்டமிட்ட துரோகமா? இந்த சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணையும், பொறுப்பற்ற அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமதமின்றி நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் இருந்து வலுவான கோரிக்கைகள் எழுந்துள்ளன என தெரிவித்துள்ளார்.

No comments: