தேசிய மகளிர் ஆணைக்குழுவின் செயல்பாட்டை உடனடியாக உறுதி செய்ய வேண்டிய அவசரத் தேவை குறித்து ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மிகவும் அவசரமான ஒரு விடயத்தை உங்களது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இக்கடிதத்தை எழுதுகிறோம் என்று குறிப்பிட்டு செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை முழுவதும் பல்வேறு சமூகங்களில் செயல்பட்டு வரும் அரசியல் செயற்பாட்டாளர்களாகிய நாங்கள், கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து வருவதை கவனித்து வருகிறோம்.
வீட்டில், பணியிடங்களில், பொது இடங்களில் மற்றும் இணைய வழியிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
உங்கள் தலைமையிலான அரசாங்கத்தின் பிரதமருக்கே கூட இணையத்தில் பாலியல் அவமதிப்புகளும் தாக்குதல்களும் நிகழ்ந்துள்ளன.
சமீப காலத்தில், சுவஸ்திகா அருலிங்கம் உள்ளிட்ட பல பெண்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா என்பவரால் இணையத்தில் பாலியல் ரீதியான வார்த்தைத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக புகார்கள் அளிப்பதற்காக, சமீபத்தில் நீங்கள் நியமித்த தேசிய மகளிர் ஆணைக்குழுவை அணுக முயற்சித்தோம்.
பெண்களின் உரிமைகள் மீறப்படுதல் தொடர்பாக விசாரணை நடத்தவும், ஆய்வு செய்யவும், புகார்களைப் பெற்றுக் கொள்ளவும் அந்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.
ஆனால், அந்த ஆணைக்குழுவை தொடர்பு கொள்ள எந்தவொரு வழியும் எங்களுக்கு கிடைக்கவில்லை. விசாரணை மேற்கொண்டபோது, அந்த ஆணைக்குழு பெயரளவில் மட்டுமே இருப்பதாகவும், நடைமுறையில் அது செயல்படவில்லை என்றும் நம்பகமான தகவல்கள் கிடைத்தன.
அந்த ஆணைக்குழுவிற்கு இதுவரை எந்தவொரு நிதியும் ஒதுக்கப்படவில்லை. தனித்துவமான அலுவலகம் இல்லை. பணியாளர்களோ, தேவையான வளங்களோ இல்லை. அதிகாரப்பூர்வ முத்திரை கூட இல்லாத நிலை காணப்படுகிறது.
மேலும், எம். ஜுவைரியா என்பவரால் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை (RTI) கோரிக்கைக்கு பதிலளிக்கும்போது, உங்கள் செயலகம் அந்த கோரிக்கையை மகளிர் விவகார அமைச்சின் தகவல் அலுவலரிடம் மாற்றியமைத்துள்ளது.
இது, தேசிய மகளிர் ஆணைக்குழு ஏற்கனவே ஒரு அமைச்சின் கீழ் கட்டுப்படுத்தப்பட்டு, அதன் சுயாதீனத்தைக் குறைக்கும் வகையில் நடத்தப்படுகிறது என்பதற்கான தெளிவான சுட்டிக்காட்டாக எங்களுக்கு தோன்றுகிறது. இது, அந்த ஆணைக்குழுவின் நோக்கம், பணிப்புரை மற்றும் சுயாதீனத்தையே நேரடியாக மீறுகிறது.
இந்த ஆணைக்குழு, எங்கள் காலத்திலுள்ள பல பெண்கள் மேற்கொண்ட நீண்ட, கடினமான போராட்டங்களின் விளைவாக உருவான ஒன்றாகும்.
அதை நியமிக்கும் பொறுப்பு கொண்ட நிர்வாகத் தலைவர் என்ற வகையில், தேசிய மகளிர் ஆணைக்குழுவை செயலற்ற நிலையில் வைத்திருப்பதன் மூலம், நீங்கள் உங்கள் அரசியலமைப்புச் சார்ந்த கடமையை மீறுகிறீர்கள்.
இதன் விளைவாக, பெண்களுக்கு எதிரான பெண்தாழ்வு மனப்பாங்கும் பாலின அடிப்படையிலான பாகுபாடுகளும் சட்டப் பாதுகாப்பின்றி மேலும் பரவுவதற்கான சூழலை உருவாக்கும் பொறுப்பும் உங்களிடமே வந்து சேர்கிறது. பெண்களாகவும், பாலின அடிப்படையிலான வன்முறைகளின் பாதிப்புக்குள்ளானவர்களாகவும், இந்த அணுகுமுறை எங்களுக்கு மனசாட்சிக்குப் புறம்பானதாகத் தோன்றுகிறது.
எனவே, தேசிய மகளிர் ஆணைக்குழுவிற்கு போதுமான நிதி, வளங்கள் மற்றும் தனித்துவமான அலுவலக வசதி வழங்கி, அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.
மேலும், அந்த ஆணைக்குழு மகளிர் விவகார அமைச்சிலிருந்து முழுமையான அரசியல் மற்றும் நிதிச் சுயாதீனத்துடன் செயல்படுவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் எனக் கோருகிறோம். இந்நடவடிக்கைகள் எப்போது மேற்கொள்ளப்படும், எப்போது தேசிய மகளிர் ஆணைக்குழு முழுமையாக செயல்படத் தொடங்கும் என்பதற்கான தெளிவான காலக்கட்டத்தையும் நீங்கள் அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். விரைவான பதிலை எதிர்பார்க்கின்றோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்;த மகஜரில், பேராசிரியர்கள் உள்ளிட்ட பெண் செயற்பாட்டாளர்கள் 138 பேரும் பெண்களால் இயக்கப்படும் 10 அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கையெழுத்திட்டு ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்
No comments: