News Just In

1/14/2026 11:13:00 AM

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவர்களின் முயற்சியினால் இலங்கையில் எந்த ஒரு விடயத்தையும் செய்யவில்லை என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவர்களின் முயற்சியினால் இலங்கையில் எந்த ஒரு விடயத்தையும் செய்யவில்லை என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்- வை. கோபி காந்த்



நூருல் ஹுதா உமர்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அபிவிருத்தி செய்யப்போவதாக கூறிக்கொண்டாலும் இதுவரை இலங்கையில் எங்கும் அதை செய்ததாக தெரியவில்லை. நாங்கள்தான் பாலம் போட்டோம் என்று தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் இங்கு கூறிக்கொள்கிறார். அவர் அவற்றின் நிதி ஒதுக்கிய வரலாற்றை தேடி அறிந்து கொள்ள வேண்டும். அதற்கான நிதி எப்போது ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று. இங்கிருக்கும் முன்னாள் தவிசாளர் அதை நன்றாக அறிந்தவராக இருக்கிறார் என காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளரும், தற்போதைய உறுப்பினருமான வை. கோபிகாந்த் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச சபையின் 04 ஆவது சபையின் ஏழாவது மாதாந்த சபைக் கூட்ட அமர்வு (13) செவ்வாய்க்கிழமை பிரதேச சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தலைமையில் ஆரம்பமானது. இங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கடந்த அரசாங்கம் ஒதுக்கிய நிதிக்கு இவர்கள் பெயர்வைப்பது யாரோ பெற்ற பிள்ளைக்கு இவர்கள் பெயர் வைப்பது போன்றாகும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவர்களின் முயற்சியினால் இலங்கையில் எந்த ஒரு விடயத்தையும் செய்யவில்லை என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அரச பிரதிநிதிகள், அரச உயர் அதிகாரிகள் அருகிலுள்ள பிரதேசங்களுக்கு விஜயம் செய்கின்றார்களே தவிர காரைதீவுக்கு வருகிறார்களில்லை. எங்களின் பிரதேசங்களில் இடம்பெறும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் போது தவிசாளரையோ அல்லது அங்கிருக்கும் உறுப்பினர்களையோ கூட அழைக்கிறார்கள் இல்லை. ஏன் இந்த பாரபட்சம்? அரசியல் சார்ந்த விடயமாக இல்லாமல் மக்களின் தேவைகளுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டம் என்றால் நிச்சயம் அவர்கள் மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்திருக்க வேண்டும்.

இதுதான் அப்படி என்றால் என்றால் ஊடகங்களுக்கு போகும் கருத்தும் வித்தியாசமாகவே இருக்கிறது. கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், பாலமுனை என்றால் காரைதீவு எங்கே போனது? காரைதீவு பிரதேசம் என்பது காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளியை சேர்த்தே குறிக்கும். ஊடக அறிக்கைகளில் காரைதீவு பிரதேசம் புறக்கணிக்கப்படுகிறது. தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்வாபா நல்லதொரு இருட்டடிப்பை இப்போது செய்து வருகிறார். காரைதீவில் அமைந்துள்ள பெரிய பாலம் அபிவிருத்தி செய்யப்பட அடிக்கல் நாடும் போதும் அதை மாவடிப்பள்ளி என்றே அடையாளப்படுத்தினார். காரைதீவில் பிளவை உண்டாக்க வேண்டாம். காரைதீவில் மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி பிரதேசங்கள் எங்களுக்கு இரு கண்களை போன்றது என்றார்.

No comments: