News Just In

1/22/2026 01:31:00 PM

வன்னிப் பெருநிலத்தில் இனப்பரம்பலை மாற்றவே கிவுல் ஓயாத் திட்டம்! - சத்தியலிங்கம் காட்டம்

வன்னிப் பெருநிலத்தில் இனப்பரம்பலை மாற்றவே கிவுல் ஓயாத் திட்டம்! - சத்தியலிங்கம் காட்டம்




தமிழர் வளங்களைச் சூறையாடி வன்னிப் பெருநில பரப்பில் கட்டமைக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு மேலும் வசதியளிக்கவே கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தை அரசாங்கம் இப்போது முன்னெடுக்கின்றது என்ற சாரப்பட முழு விவரங்களோடு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றி இருக்கின்றார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்படும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் பற்றி அவர் நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் முழு விவரம் வருமாறு:-

"கிவுல் ஓயா திட்டமானது 2011ம் ஆண்டு திட்டமிடப்பட்டு நான்கு வருடங்களில் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசு இப்போது திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்த 23,456 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதோடு இவ்வருட வரவு - செலவு திட்டத்தில் 2500 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திட்ட முன்மொழிகளில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் நீர்த்தேவையை நிவர்த்திசெய்யும் திட்டம் என கூறப்பட்டாலும் 1983 ஆம் ஆண்டு வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக்குடியேற்ற பகுதியான மகாவலி - எல் வலயத்தின் நீர்த்தேவைக்காகவே இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.

மகாவலி - எல் வலயம் 480,000 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது.

இத்திட்டத்தை ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஆணையம்( UNDP) மற்றும் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (FAO) இணைந்து 1964-1968 காலப்பகுதியில் திட்டமிட்டிருந்தார்கள்.

இப்பிரதேசத்தில் குடியேற்றத்தை செய்து, குடியேற்றவாசிகளிற்கான நீர்பாசன ஆதாரங்களாக தண்ணிமுறிப்புக்குளம் மற்றும் பதவியாக்குளங்களை பயன்படுத்துவதுடன் மேலதிக நீரை மகாவலி ஆற்றிலிருந்து வடமத்திய மாகாண கால்வாயினூடாக ( NCP-Canal) வழங்குவதாக திட்டமிடப்பட்டது. ஆனால் அவ்வாறு மகாவலி ஆற்றின் நீரை கொண்டுவருவது சாத்தியமற்றது என அறிந்திருந்தாலும் அவர்களது உள்நோக்கம் வடக்கு மாகாணத்தில் இனப்பரம்பலை மாற்றுவதற்காக குடியேற்றம் செய்வதாகவே இருந்தது.

மகாவலி-எல் வலயத்தில் குடியேற்றம் செய்யப்படும் போது இந்தநாட்டில் வாழும் காணியற்ற அனைத்து இன மக்களையும் குடியேற்றியிருக்க வேண்டும், ஆனால் முழுமையான சிங்கள குடியேற்றமே அங்கு செய்யப்பட்டது. இவ்விடயத்தை நாம் சொல்லும்போது நீங்கள் இனவாதமாக சித்திரிக்கலாம்.

மகாவலி-எல் வலயத்தில் குடியேற்றப்பட்டவர்களின் குடிப்பெருக்கம் மற்றும் அதிகரித்த நீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் செய்யப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் மகாவலி ஆற்றிலிருந்து நீரை கொண்டுவருவது சாத்தியமற்றதாக இருப்பதால் கிவுல் ஓயா நீர் வியோகத்திட்டத்தை முன்மொழிவதாக சொல்லப்படுகிறது.

மகாவலி-எல் வலயத்திற்கான நீரை வழங்கும் 'கிவுல் ஓயா' திட்டத்திற்கான நீர் வரத்தானது வவுனியா வடக்கின் அடர்ந்த காடு மற்றும் நீர்ப்பாசன குளங்கள், வயல்களில் இருந்து சேகரிக்கப்படும் மழைநீரால் உருவாகும் சிற்றருவிகள் சேர்ந்து உருவாக்கிய ஆற்றை 4.41கி.மீ நீளமான அணைக்கட்டொன்றை கட்டுவதனூடாக நீரை தேக்குவதாகும்.

இவ்வாறு தேக்கப்படும் 3,900 ஏக்கர் நீரேந்து பிரதேசம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வருவதுடன் இந்நீர்த்தேக்கத்தில் 64MCM அதாவது 51,904 ஏக்கர் அடி நீர் சேகரிக்கப்படுவதோடு 13 கி.மீ நீளமான கால்வாயினூடாக 1700ஹெக்ரயர் (4100 ஏக்கர்) புதிய வயல் நிலத்திற்கு நீர் விநுயோகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இதுகாலவரை குடியேற்றவாசிகள் பயன்படுத்திய 1700 ஏக்கர் வயலில் இரு போகம் விவசாயம் செய்வதற்கான மேலதிக நீரை வழங்கமுடியும்.

கிவுல் ஓயா திட்டத்தின் நீரேந்து பகுதியாகி பாதிக்கப்படும் வவுனியா வடக்கு பிரதேசத்திற்கு எந்தவிதமான பிரயோசனமும் இத்திட்டத்தினூடாக கிடையாது.

No comments: