News Just In

1/08/2026 04:27:00 PM

சாய்ந்தமருதில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை நடவடிக்கை

சாய்ந்தமருதில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை நடவடிக்கை


நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் வழிகாட்டலில், இன்று 08.01.2026 சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலை வீதி பகுதியில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

டெங்கு உள்ளிட்ட நுளம்பால் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்கள் செயற்பாட்டுடன் பங்கு பெற்றனர்.

இதன்போது வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது இடங்களை ஆய்வு செய்த குழுவினர், நுளம்பு பெருக்கத்திற்கு வழிவகுக்கும் நீர் தேங்கிய இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றும் நடவடிக்கைகளையும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.

நுளம்பு கட்டுப்பாட்டில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியதுடன், சுற்றுப்புற சூழலை தூய்மையாக பேணுவதன் மூலம் டெங்கு அபாயத்தை குறைக்க முடியும் என தெரிவித்தனர்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் பொதுச் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இவ்வாறான நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

No comments: