சுற்றுலா துறையின் ஊடாக கிராமப்புற சமூகத்தை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் Homestay Tourism ஊக்குவிப்பு திட்டத்தை பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தும் நிகழ்வும், அதனை முன்னெடுக்கும் வகையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் Ceygate Travels (Pvt) Ltd ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வும் நேற்று (23.12.2025) கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைச்சர் உபாலி பன்னிலமே தலைமையில் அமைச்சின் கேட்போர் அரங்கில் நடைபெற்றது.
வருடத்திற்கு குறைந்த வருமானம் கொண்ட நான்கு இலட்சம் குடும்பங்களை வலுப்படுத்தும் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனுடன் இணைந்து, சுற்றுலா துறையின் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
அமெரிக்க ஒன்றியத்தில் வசிக்கும் இலங்கைச் சேர்ந்த கல்வியாளர்கள் குழுவின் முன்னெடுப்பில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நடத்தப்பட்ட பல கட்ட கலந்துரையாடல்களின் பயனாகவே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா துறையை ஊக்குவிப்பதுடன், பொருளாதார ரீதியாக வலுப்படுத்தக்கூடிய கிராமப்புற பகுதிகளில் வாழும் குறைந்த வருமான சமூகங்களை சுற்றுலா துறைக்குத் தயார்படுத்துதல், தேவையான பயிற்சிகள் வழங்குதல், அடிப்படை வசதிகளை உருவாக்குதல், உதவித் தொகைகள் மற்றும் கடன் வசதிகளை வழங்குதல் ஆகியவை இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சார்பில் அதன் பணிப்பாளர் நாயகம் சி.டி.களுஆராச்சி, Ceygate Travels (Pvt) Ltd நிறுவனத்தின் சார்பில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.எஸ்.ஏ.சி. சேனரத் ஆராச்சி ஆகியோர் இந்தத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்வில் கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, மேலதிக செயலாளர் நாலிகா பியசேன, அமைச்சின் அதிகாரிகள், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments: