அண்மையில் கண்டி மற்றும் கம்பளைக்கு விஜயம் மேற்கொண்டபோது மலையகத்தில் இருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை அழைப்பதற்குத் தயாராகவே வந்தோம் எனத் தெரிவித்துள்ள தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தற்போது மனோகணேசனும் மலையக மக்களும் அதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், அம்மக்களை மிகுந்த பாசத்துடன் மனதார வரவேற்பதற்குத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட 'தித்வா' சூறாவளியை அடுத்து உருவான வெள்ளப்பெருக்கு, மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், நூற்றுக்கணக்கானோர் காணாமல்போயும், இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தும், இன்னமும் முழுமையாக மதிப்பிடப்படாத பெருந்தொகை சொத்துக்கள் சேதமடைந்தும் நாடு பேரழிவுக்கு முகங்கொடுத்துள்ளது.
குறிப்பாக மலையக மக்கள் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டிருக்கும் பின்னணியில், 'மலையகத் தமிழர், மலையக மண்ணில் தான் வாழவேண்டும் என நானும் விரும்புகிறேன். ஆனால் பாதுகாப்பான காணி உரிமையை வழங்குவதற்கு மறுத்தால், எமது மக்கள் மலை மண்சரிவில் சிக்குண்டு தொடர்ச்சியாகப் பலியாவதா?' என்று கேள்வி எழுப்பியுள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், 'எனவே மாற்றுயோசனையாக வட, கிழக்கு மாகாணங்களில் புலம்பெயர்வினால் வெற்றிடங்களாகி காடாகிக்கொண்டிருக்கும் காணிகளை, அவற்றின் உரிமையாளர்கள் மனமுவந்து வழங்குவார்களாயின், அங்குசென்று குடியேறி உழைத்து வாழ விரும்புகிறீர்களா என நான் சந்தித்த மக்களிடம் கேட்டேன்' எனத் தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அப்பதிவில் கூறியிருப்பதாவது;
உங்களுடன் கடந்த வாரம் கண்டி, கம்பளைக்குச் சென்றபோது மலையகத்தில் இருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை அழைப்பதற்குத் தயாராகவே வந்தோம்.
ஆனால் நீங்களும், அவர்களும் அதற்கான விருப்பத்தைத் தெரிவிக்கும் வரை பகிரங்கமாக அதனைச் சொல்வதைத் தவிர்த்திருந்தோம். இப்போது அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, மக்களும் அதனை விரும்புவதாகச் சொல்கிறார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் உங்களை மிகுந்த பாசத்துடன் மனதார வரவேற்கிறோம். ஏற்கனவே எம்மில் பலர் தங்கள் சொந்த நிலங்களைக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளார்கள். அதேபோன்று அரச காணிகளையும் வாழ்விடங்களுக்கும், பயிர்ச்செய்கை மற்றும் தோட்டம் போன்றவற்றுக்கும் பெற்றுத்தர எம்மாலான முயற்சிகளை செய்துகொடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
No comments: