News Just In

12/26/2025 06:34:00 AM

கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் சிறிதரனின் விளக்க அறிக்கை வெளிவருவதில் ஏன் இவ்வளவு தாமதம் - ஐங்கரன் குகதாசன்

கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் சிறிதரனின் விளக்க அறிக்கை வெளிவருவதில் ஏன் இவ்வளவு தாமதம் - ஐங்கரன் குகதாசன்


இராணுவ அதிகாரியொருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் தெளிவுபடுத்தி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் விளக்க அறிக்கை வெளிவருவதில் ஏன் இவ்வளவு தாமதம் என சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீண்டகால வெற்றிடம் நிலவிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தற்போது சேவையில் உள்ள இராணுவ அதிகாரியான கேர்ணல் ஓ.ஆர்.ராஜசிங்கவை நியமிப்பதற்கு ஜனாதிபதி அநரகுமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனை அண்மையில் அரசியலமைப்புப்பேரவையில் ஐந்துக்கு நான்கு என்ற வாக்கு விகிதாசாரத்தில் தோற்கடிக்கப்பட்டது. இருப்பினும் அந்த யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தோரில் அரசியலமைப்புப்பேரவையில் சிறுகட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரனும் உள்ளடங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் கடும் விசனத்தை வெளிப்படுத்திவரும் பின்னணியில், இராணுவமயமாக்கலைத் தீர்க்கமாக எதிர்க்கும் சிறிதரன், இவ்வாறு வாக்களித்தமைக்கான காரணத்தை தமிழ்மக்களுக்குத் தெளிவுபடுத்துவது அவசியமாகும் என சட்டத்தரணி ஐங்கரன் வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இவ்விவகாரத்துடன் அண்மையில் சர்ச்சைக்குள்ளான இழப்பீட்டுக்கான அலுவலக நியமனம் தொடர்பிலும் சிறிதரன் தெளிவுபடுத்தவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அவ்வாறு தெளிவுபடுத்தும் விளக்க அறிக்கை வெளிவருவதில் ஏன் இத்தனை தாமதம்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments: