News Just In

12/25/2025 08:11:00 AM

சேதமடைந்த பாடசாலைகள் தொடர்பில் பிரதமரின் உடனடி நடவடிக்கை; ஆசிரியர்களுக்கும் கொடுப்பனவு

சேதமடைந்த பாடசாலைகள் தொடர்பில் பிரதமரின் உடனடி  நடவடிக்கை; ஆசிரியர்களுக்கும் கொடுப்பனவு




கல்வி அமைச்சும் யுனிசெப் நிறுவனமும் இணைந்து, 'டிட்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்த ஆய்வொன்றை முன்னெடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இவ் ஆய்வின் பின்னர், விரைவாகப் புனரமைக்கப்படக்கூடிய பாடசாலைகளைச் சீரமைக்கவும், மண்சரிவு போன்ற அச்சுறுத்தல்கள் நிலவும் பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளைப் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு இடமாற்றவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

'டிட்வா' சூறாவளியினால் சேதமடைந்த பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல தேசிய பாடசாலையை இன்று,, நேரில் சென்று பார்வையிட்ட பின்னரே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கடும் காற்றினால் மரம் முறிந்து விழுந்ததில் முற்றாகச் சேதமடைந்த கெட்டவத்தை, யோதஉல்பத்த சமூக மண்டபத்தில் இயங்கிவந்த பாலர் பாடசாலையைப் பார்வையிட்ட பிரதமர், பிள்ளைகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, பாதுகாப்பான ஓரிடத்தில் குறித்த பாலர் பாடசாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்படுகின்றனவா என்பது குறித்துக் கவனம் செலுத்திய பிரதமர், அனர்த்தத்தினால் தொடர்ந்து இயங்க முடியாத அளவிற்குச் சேதமடைந்துள்ள பாலர் பாடசாலைகளைக் கண்டறிந்து, அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்குத் தேவையான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து, மண்சரிவு காரணமாகக் கடும் சேதங்களுக்கு உள்ளான பசறை யூரி தமிழ் ஆரம்பப் பாடசாலையையும் பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் தியத்தலாவை தீரானந்த தேரர், ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன, மாகாணப் பிரதம செயலாளர் அனுஷா கோகுல, மீகஹகிவுல தேசிய பாடசாலையின் அதிபர் எச்.டபிள்யூ.கே.ஏ. பத்மகுமார, பசறை யூரி தமிழ் ஆரம்பப் பாடசாலையின் அதிபர் கே. இந்துமதி உள்ளிட்ட அரச அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டனர்.





No comments: