News Just In

12/10/2025 05:25:00 AM

பொலிவேரியன் மக்களுக்கு நிரந்தர தீர்வை வழங்க நிபுணர்களின் ஆலோசனை பெறவேண்டியுள்ளது : சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக்

பொலிவேரியன் மக்களுக்கு நிரந்தர தீர்வை வழங்க நிபுணர்களின் ஆலோசனை பெறவேண்டியுள்ளது : சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக்



நூருல் ஹுதா உமர்

சுனாமியால் பாதிக்கப்பட்டு எஹட் நிறுவனத்தினால் கட்டி மக்களுக்கு வழங்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம வீடுகள் வருடாவருடம் ஏற்படும் கடும் மழை காரணமாக வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில், எதிர்காலத்தில் இப்பகுதி மீண்டும் பாதிக்கப்படாத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனாலும் நாட்டின் நிலை, இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தேவைப்படும் பொருளாதாரம், நிபுணத்துவ ஆலோசனை என்பவற்றை ஆராய்ந்து பொருத்தமான நடவடிக்கைக்கு நாங்கள் தயாராகி வருகிறோம் என சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று (09) அரச உதவித்தொகையை கையளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், பொலிவேரியன் கிராமத்தின் தாழ்வுபகுதிகளில் நீரேற்றம் தாமதமாக நடைபெறும் நிலைமை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நீரேற்றக் கால்வாய்கள் சீரமைத்தல், மேலதிக வடிகால் அமைப்புகள் உருவாக்கல், தடைபட்ட நீரேற்ற பாதைகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்க தேவையான விடயங்களை ஆராய்ந்து வருகிறோம். எமது பிரதேசத்தில் உள்ள சனத்தொகை நெரிசலினால் மக்களின் நலனுக்காக வழங்கப்படும் மனிதாபிமான அனுமதிகளை பிழையாக சிலர் கையாண்டுள்ளனர். இதனால் மக்களுக்கு நிறைய பாதிப்புக்கள் உள்ளது.

மேலும், எதிர்காலத்தில் தடுபிடிக்கக்கூடிய வெள்ளம் மற்றும் நீரேற்ற பிரச்சினைகளைத் தவிர்க்க பொறியியல் நிபுணர்கள் இணைந்து தொழில்நுட்ப பரிந்துரைகளை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் பாதுகாப்பு முதன்மை என்பதை வலியுறுத்திய அவர், அவசரகால தேவைகள், உதவிகள் மற்றும் நீர்நிலைகளின் கண்காணிப்பு பணிகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக கூறினார். மக்களின் வீட்டை உயர்த்துவதால் பல நடைமுறை சார் பிரச்சினைகள் இருப்பதாகவும் அவற்றை எப்படி கையாள முடியும் என்பது பற்றியும் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.

வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட போது எங்களின் காரியாலய உத்தியோகத்தர்கள் இரவு பகல் பாராது கடுமையான பிரயத்தனங்களை எடுத்தார்கள். 10 நாட்களளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்தும் கூட பெண் உத்தியோகத்தர்கள் கூட பணியில் முழுமனதுடன் ஈடுபட்டார்கள். நிறைய தனவந்தர்கள் இடைத்தங்கல் முகாமுக்கு உணவுகளையும், உலருணவுகளையும் வழங்கி ஒத்துழைப்பு நல்கினார்கள். இவர்கள் எல்லோரையும் நான் நன்றியுடன் இவ்வேளையில் நினைவு கூர்கிறேன்.

பொலிவேரியன் கிராம மக்கள் எதிர்நோக்கிய சவால்களை குறைக்கும் வகையில் தற்காலிய தீர்வுகளை வழங்காது மாவட்ட செயலகம், நகர அபிவிருத்தி அதிகார சபை, நீர்ப்பாசன திணைக்களம், விவசாய திணைக்களம் போன்ற பல அரசாங்க நிறுவனங்களும், உள்ளூராட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு திட்டமிடல் பணிகளை முன்னெடுத்து வருகின்றன என்றும், வீட்டை உயர்த்துவதா? முழுமையாக உடைத்துவிட்டு புதிய நிர்மாண பணிகளை முன்னெடுப்பதா? போன்ற பல நடைமுறை சாதக விடயங்களை ஆராய்ந்து வருவதாகவும் பொறியியலாளர்கள், நிபுணர்களின் உதவியைக்கொண்டு மக்களுக்கு நிலையான தீர்வை வழங்க தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் ஜனாதிபதி அவர்கள் மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள ஒருவர் என்பதால் அனர்த்தம் இடம்பெறும் இந்த இடத்துக்கும் பொருத்தமான தீர்வை வழங்குவார். அதற்கான பணிகளை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம் என பிரதேச செயலாளர் எம். எம். ஆசிக் தெரிவித்தார்

No comments: