
யாழ். தையிட்டி போராட்டக்களத்தில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்று இரவு அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட தரப்பினர் அடாத்தாக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட ஐவரும், மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிபதி காயத்திரி அகிலன் வீட்டில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஐவரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு மீண்டும் தை மாதம் 26 ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில் நேற்று தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரை விவகாரத்திற்காக சாத்வீகமான முறையில் போராட்டம் நடைபெற்றபோது சைவ சமயத்தலைவர்களில் ஒருவரான நல்லூர சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதை அகில இலங்கை சைவ மகா சபை வன்மையாக கண்டித்துள்ளது.
வணக்கத்துக்குரிய மதத்துறவி மீது மிக மோசமான நடத்தையை காண்பித்தமை மிகவும் பாரதூரமான தவறாகும். இலங்கையில் உள்ள அனைத்து மதத்தலைவரைகளையும் சமனாக மதிக்க வேண்டிய சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்கள் ஒரே தலைபட்சமாக சட்டரீதியற்ற முறையில் தனியார் காணியில் அடாத்தாக நிறுவப்பட்டுள்ள ஒரு மதக்கட்டிடத்திற்காக அதனை எதிர்த்து போராடிய பிரதேசத்து மதத்தலைவரை மிலேச்சுதனமாக தள்ளிச் சென்று வாகனத்தில் ஏற்றி கைது செய்தமை எமது சமயத்தை அவமதித்த செயலாகும்.
இந்த விடயத்தில் அரசு உடனடியாக பக்கச்சார்பற்ற விசாரணை முன்னடுத்து சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை வேண்டும் என இலங்கை சைவ மகா சபை கேட்டுக்கொண்டுள்ளது.
No comments: