News Just In

12/03/2025 04:05:00 PM

அனர்த்த காலங்களில் அரசியல் வேறுபாடுகளை தாண்டி மக்கள் பாதுகாப்புக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்

அனர்த்த காலங்களில் அரசியல் வேறுபாடுகளை தாண்டி மக்கள் பாதுகாப்புக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் - ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி


நூருல் ஹுதா உமர்

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தொடர்ச்சியாக உருவாகிக் கொண்டிருக்கும் வெள்ளம், நிலச்சரிவு, பல்வேறு காலநிலைச் சீற்றங்கள் போன்ற அனர்த்தங்கள் மக்கள் வாழ்க்கையை தீவிரமாக பாதித்து வரும் இந்த முக்கிய தருணத்தில், மனித உயிர்களை பாதுகாப்பதும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் துரித நிவாரணம் வழங்குவதும் அரசியல் வட்டாரங்களின் முதன்மைக் கடமையாக ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.

அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கை முரண்பாடுகளும் இயல்பானவையே. ஆனால், மக்களின் உயிர் மற்றும் வாழ்வு ஆபத்தில் உள்ள இந்த வேளையில் எந்த அரசியல் சிந்தனையும் முதன்மை அல்ல; மனிதநேயம் மட்டுமே முதன்மை. எனவே, தற்போதைய அவசர சூழலில் அரசாங்கத்துடன் எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது தேசியப் பொறுப்பாகும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் வேகமடைய, அவசர நிவாரணம் முறையாகப் பகிர்ந்தளிக்க, சுகாதாரம், குடிநீர், தங்குமிடம், கல்வி, போக்குவரத்து போன்ற துறைகளில் உடனடி தீர்வுகள் காண, அனைத்து அரசியல் கட்சிகளின் ஒற்றுமையான பங்களிப்பு நாட்டுக்கு மிக அவசியமாக உள்ளது. மக்கள் தேவைகளை முன்னிறுத்தி, புறக்கணிப்போ, விமர்சன அரசியல் போக்கோ இல்லாமல் ஒருங்கிணைந்த செயற்பாடு மட்டுமே நாட்டை இந்த நெருக்கடியிலிருந்து மீட்கக் கூடிய வழி.

எதிர்க்கட்ச்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டான நவம்பர் 12ம் திகதிய வானிலை அவதான நிலைய அறிவுறுத்தலுக்கமைய அணைகள் மற்றும் குளக்கட்டுக்களை திறந்துவிட்டு அனர்த்த ஆபத்தை குறைத்திருக்கலாம் என்ற நியாயமான கருத்துக்கள் இருந்த போதிலும் நடந்தவற்றை பேசிக்கொண்டிராமல் முன்னோக்கி பயணிக்க நாம் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்

ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி அனைத்து எதிர்க்கட்சிகளையும், சமூக அமைப்புகளையும், தன்னார்வ இயக்கங்களையும், குடிமக்களையும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுமாறு வலியுறுத்துகிறது. நாம் ஒரே தேசத்தின் பிள்ளைகள்; அனர்த்தத்தை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டிய கட்டாயப் பொறுப்பு உள்ளது. மக்களின் பாதுகாப்பும் நலனும் அரசியலுக்கு மேல். நாடு சிக்கலில் இருக்கும் போது ஒற்றுமை மட்டுமே நம் பலம் என தனது ஊடக அறிக்கையில் ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.

No comments: