
(27.11.2025 )வியாழக்கிழமை இரவு 10.00 மணி டிட்வா புயலானது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
நிலவும் வானிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இது தற்போது மட்டக்களப்புக்கும் அம்பாறைக்கும் இடைப்பட்ட மகா ஓயா பகுதியில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு வட மேற்கு திசையில் நகரும். தற்போதைய நிலையில் இந்த புயலின் மையப்பகுதி முழுவதும் நிலத்தின் ஊடாகவே நகரும் வாய்ப்புள்ளது.
ஆனாலும் நகர்வுப் பாதை இன்னமும் இறுதியாகவில்லை. இந்த புயலின் மையம், மற்றும் உள்வளையம் ஆகியன வடக்கு மாகாணத்தின் முழுப் பகுதியையும் உள்ளடக்கியே நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தற்போதைய நகர்வின் படி எதிர்வரும் 02.12. 2025 அன்று வட தமிழகத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது புயலின் மையம் மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் உள்ளமையால் இப்பகுதிகளில் ஒரு அசாதாரண அமைதி நிலவும். ஆனால் அது நிலையானதல்ல. இந்த புயலினால் நாடு முழுவதற்கும் எதிர்வரும் 29.11.2025 வரை மிகக் கனமழை கிடைக்கும்.
அம்பாறைக்கு நாளை பிற்பகல் முதல் படிப்படியாக மழை குறையும். ஆனாலும் எதிர்வரும் 30.11.2025 வரை மழை கிடைக்கும். மட்டக்களப்பு மாவட்டத்துக்கு எதிர்வரும் 29.11.2025 முதல் மழை படிப்படியாக குறைவடையும்.
ஆனால் திரு கோணமலை மாவட்டத்திற்கு நாளையும் நாளை மறு தினமும் மிகக் கனமழை கிடைக்கும். வவுனியா மாவட்டத்துக்கு நாளையும் நாளை மறு தினமும் மிகக் கனமழை கிடைக்கும்.
No comments: