News Just In

12/17/2025 06:46:00 PM

பொற்கால கல்விச் சாதனையின் சின்னம் நஜிமுதீன் இல்முல் ஹஸ்லா - ருஹுணு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இரட்டைத் தங்கப் பதக்கம் !

பொற்கால கல்விச் சாதனையின் சின்னம் நஜிமுதீன் இல்முல் ஹஸ்லா - ருஹுணு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இரட்டைத் தங்கப் பதக்கம் !





நூருல் ஹுதா உமர்

“Econ Icon – Season 4” போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று கல்வி உலகின் கவனத்தை ஈர்த்த தென் மாகாண நஜிமுதீன் இல்முல் ஹஸ்லா, அதனைத் தொடர்ந்து ருஹுணு பல்கலைக்கழகத்தில் ஒரு மிகப் பெரிய கல்விச் சாதனையை பதிவு செய்து, மீண்டும் கல்வித் துறையில் பொற்கால மைல்கல்லை பதித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டில் ருஹுணு பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக இளமானி (சிறப்பு) பட்டப்படிப்பில் கல்வி பயிலும் நூற்றுக்கணக்கான திறமைமிக்க மாணவர்களுக்கிடையே, கடுமையான போட்டி மற்றும் கடினமான மதிப்பீட்டு முறைகள் நிலவிய சூழலில், மிக உயர்ந்த GPA பெற்றதன் அடிப்படையில் நஜிமுதீன் இல்முல் ஹஸ்லா இரண்டு முக்கிய தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
மனித வள முகாமைத்துவ துறையில் முதல் வகுப்புடன் மிக உயர்ந்த GPA பெற்றதற்காக தேசமான்ய கலாநிதி நிஹால் ஜினசேன நினைவு தங்கப் பதக்கத்தையும், மனித வள முகாமைத்துவ துறை சிறப்புப் பாடங்களில், முதல் முயற்சியிலேயே மிக உயர்ந்த மொத்த மதிப்பெண்களைப் பெற்றதற்காக மற்றொரு தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
ருஹுணு பல்கலைக்கழகத்தில் இத்தகைய இரு தங்கப் பதக்கங்களை ஒரே தடவையில் பெறுவது மிகவும் கடினமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் உயர்தர திறமை கொண்ட பல மாணவர்கள் சிறிய மதிப்பெண் வித்தியாசங்களிலேயே கடும் போட்டியில் ஈடுபடுகின்றனர். இத்தகைய சூழலில், இந்த உயரிய விருதுகளை வெல்வது, நஜிமுதீன் இல்முல் ஹஸ்லாவின் அபாரமான அறிவுத்திறனையும், தளராத மன உறுதியையும் வெளிப்படுத்துகிறது.
மேலும், திக்குவல்லை மின்ஹாத் தேசிய பாடசாலை வரலாற்றில், அப் பாடசாலையில் கல்வி கற்று பல்கலைக்கழக தங்கப் பதக்கங்களை பெற்ற முதன்மையான மாணவி என்ற பெருமையும் நஜிமுதீன் இல்முல் ஹஸ்லாவுக்கு கிடைத்துள்ளது. இது அந்தப் பாடசாலைக்கும், திக்குவல்லை பிரதேசத்திற்கும் அளவற்ற பெருமை சேர்க்கும் ஒரு வரலாற்று சாதனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: