News Just In

11/08/2025 05:32:00 AM

அம்பாறை மாவட்ட காணி சமபங்கு வேண்டும் நூல் வெளியீட்டு விழா : மேயர் அதாஉல்லா கலந்து கொண்டு நீண்ட உரை நிகழ்த்தினார் !

அம்பாறை மாவட்ட காணி சமபங்கு வேண்டும் நூல் வெளியீட்டு விழா : மேயர் அதாஉல்லா கலந்து கொண்டு நீண்ட உரை நிகழ்த்தினார் !


நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டத்தில் நில உரிமை மற்றும் காணி சமபங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சட்டத்தரணி ஆஷிக் அலியார் மற்றும் சட்டத்தரணி சர்ஜுன் ஜமால்தீன் இணைந்து எழுதிய “அம்பாறை மாவட்டம் : காணி சமபங்கு வேண்டும்” என்ற நூல் வெளியீட்டு விழா இன்று (07) சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஐ.எம்.இப்ராஹிம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நூல், அம்பாறை மாவட்டத்தில் நில உரிமை, காணி சமபங்கு, முஸ்லிம்,சிங்கள மற்றும் தமிழ் கிராமங்களில் காணி ஒதுக்கீட்டில் நிலவும் பிரச்சினைகள், வரலாற்றுப் பின்னணி, மற்றும் தீர்வுக்கான பரிந்துரைகள் குறித்து ஆழமான ஆய்வாக எழுதப்பட்டுள்ளது. நூல் ஆய்வுரையை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான, அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லா கலந்து கொண்டு இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள், கிழக்கு மாகாண மக்களின் வாழ்வியல் பிரச்சனைகள், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள், முஸ்லிம் அரசியலின் கடந்த கால பயணங்கள், தற்காலத்தில் எதிர்கொள்ளும் சவால்கள், அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டிய சமூக பணிகள் தொடர்பான ஆழமான உரை நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்வில் சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷூறா தலைவர் ஓய்வு பெற்ற சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி அஷ்ஷெய்க் எம்.ஐ. அமீர் கருத்துரை வழங்கினார்.

இந்த விழாவில் உலமாக்கள், ஊர் தலைவர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், கல்வியாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் தொடர்ந்து நூலாசிரியர்கள் ஏற்புரை நிகழ்த்தும் போது நிலம் என்பது வாழ்வின் அடிப்படை உரிமை; சமபங்கு வழங்காமை சமூக அநீதிக்கு வழிவகுக்கிறது” என வலியுறுத்தி உரையாற்றியதுடன் கரையோர மாவட்டமும், கரையோர தேர்தல் மாவட்டமும் தொடர்பில் ஆழமான கருத்துக்களை முன்வைத்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு “அம்பாறை மாவட்டம் : காணி சமபங்கு வேண்டும்” என்ற நூல் வழங்கி வைக்கப்பட்டதுடன், கடந்த காலங்களில் சமூக பணியாற்றிய தலைவர்களுக்கான கௌரவமும் இடம்பெற்றது.

No comments: