யார் இந்த ஜோரான் மம்தானி? - நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி முதல் ட்ரம்ப்புக்கு எச்சரிக்கை வரை!

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் அபார வெற்றி பெற்றதோடு, வெற்றி உரையில் ட்ரம்ப்பை தெறிக்கிவிட்டு கவனம் ஈர்த்துள்ளார் ஜோரான் மம்தானி (Zohran Mamdani). இவர் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும், முதல் இந்திய அமெரிக்க முஸ்லிம் என்பதும், இந்த நூற்றாண்டில் நியூயார்க்கின் இளம் மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ஜோரான் மம்தானி? - நீங்கள் ‘சலாம் பாம்பே’, ‘மான்சூன் வெட்டிங்’ போன்ற திரைப்படங்கள், ‘ஸோ ஃபார் ஃப்ரம் இந்தியா’ போன்ற ஆவணப்படம் பற்றி அறிந்திருந்திருந்தால், அதனை இயக்கிய மீரா நாயரையும் தெரிந்திருக்கும். அந்த பிரபல இயக்குநர் மீரா நாயர் மற்றும் உகாண்டாவைச் சேர்ந்த மஹமூத் மம்தானியின் மகன் தான் இந்த ஜோரான் மம்தானி.
34 வயதான ஜோரான் மம்தானி ஒரு சட்ட வல்லுநர். இவர் தனது தேர்தல் உரைகளில், “அமெரிக்க அரசியலில் மாற்றம் தேவை. இது மக்களுக்கான, அவர்களின் தேவைகளுக்கான அரசியலாக இருக்க வேண்டுமே தவிர உயரடுக்கு மக்களுக்கானதாக இருக்கக் கூடாது” என்று கூறியிருந்தார். நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட மம்தானி, அபார வெற்றி பெற்றுள்ளார். 20 லட்சம் வாக்குகளுக்கும் மேல் பெற்று அபார வெற்றிச் சரித்திரத்தை பதிவு செய்துள்ளார். ஜனவரி மாதம் மம்தானி நியூயார்க் மேயராக பதவியேற்பார்.
கவனம் ஈர்த்த வெற்றி உரை: மம்தானி தனது வெற்றி உரையில் அப்படி என்னதான் பேசினார்? - “நான் உங்கள் ஆதரவால் மேயராகியுள்ளேன். இனி என் கடமை, ஊழல் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது. இந்த ஊழல்தான் ட்ரம்ப் போன்ற பெரும் பணக்காரர்கள் வரி ஏய்ப்பு செய்ய வழிவகுத்தது. முதலில் உள்ளூர் அரசியலில் உள்ள ஊழலை ஒழிப்பேன். நான் இந்த நகரின் மேயராக உயரடுக்கு செல்வந்தர்களுக்காக மட்டும் செயல்படுபவராக இல்லாமல், இந்த நகரில் உள்ள ஒவ்வொருவருக்காகவும் செயல்படுவேன்.
அதிபர் ட்ரம்ப்புக்கு இன்று நான் சில வார்த்தைகளை சொல்ல விரும்புகிறேன். உங்களை அதிபராக்கிய மக்களுக்கு உங்களை வெளியேற்றவும் தெரியும். இன்றைய இரவு இந்த நியூயார்க் நகரின் நிண்ட வரலாறாக இருந்த அரசியல் சகாப்தத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். குடியரசுக் கட்சி வேட்பாளர் ஆண்ட்ரூ கூமோ தோல்வியடைந்துள்ளார். இந்த நாள் நியூயார்க் நகரில் அரசியலில் ஒரு திருப்புமுனை. இன்றைய தினம், சிலருக்கு மட்டுமே ஆதாயமாக இருக்கு ஓர் அரசியலுக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் ஓர் இளைஞர். நான் ஒரு முஸ்லிம். நான் ஒரு ஜனநாயக சோஷலிஸ்ட். ஆனால், நான் இதில் எதற்காகவும் மன்னிப்பு கோரப்போவதில்லை.” என்றார். ரமா துவாஜி என்ற சிரிய நாட்டில் பிறந்த ஓவியர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார் மம்தானி
No comments: